மொபைல் போன்கள் இன்றைய காலகட்டத்தில் நமது உயிர்நாடியாக மாறிவிட்டன. ஏனெனில், ஒருவரை தொடர்பு கொள்ளவும், செய்திகளைப் பெறவும், செயலிகளை பயன்படுத்தி வேலை செய்யவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும், சமூக ஊடகங்கள் வழியாக இணைந்திருக்கவும், என பல நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம். 


5ஜி சேவையில் ஆதிக்கம் செலுத்தும் ஜியோ:


இந்த சூழ்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி, 5ஜி சேவையை பிரதமர் மோடி இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவை பொறுத்தவரையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கிய போதிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு இன்னும் விரிவுப்படுத்தவில்லை.


இந்தியா முழுவதும் 236 நகரங்களில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான நகரங்களுக்கு விரிவுப்படுத்திய ஒரு நிறுவனம் ஜியோதான். ஏர்டெலை பொறுத்தவரையில், 80க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.


இதற்கு மத்தியில், 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை விரிவுப்படுத்த ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டமிட்டு வருகிறது. 


இணைய சேவை வேகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:


இந்நிலையில், மொபைல் இணைய சேவை வேகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. 10 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், 69 இடத்திற்கு சென்றுள்ளது. 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக இந்தியா இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 


சில பகுதிகளில் ஜியோவின் இணைய வேகம் 1000Mbps க்கும் அதிகமாக செல்வதாக கூறப்படுகிறது. Ookla Speedtest குளோபல் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா முன்னதாக 79ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தது.


இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. உலக நாடுகள் அடங்கிய பட்டியலில் 20 இடங்கள் முன்னேறியுள்ளது சைப்ரஸ்.


5ஜி தொழில்நுட்பம், இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். 2023 மற்றும் 2040க்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு  36.4 டிரில்லியன் டாலர்கள் ($455 பில்லியன்) பயன் அளிக்கும் என மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.


2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 5G சேவையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2G மற்றும் 3G இன் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறையும் என்றும் மொபைல் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், ஜியோ, ஏர்டெல், வி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்திருந்தன.