மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குறிப்பாக தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இதற்கிடையே, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு, தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது.


இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு:


இந்தி திணிக்கப்படுவதாக கூறி, பிரச்னைகள் எழுவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது, மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது. பொதுவாக, இந்த பிரச்னையை தமிழ்நாடுதான் எழுப்பும், ஆனால், இந்த முறை இந்தி திணிப்பு பிரச்னையை கையில் எடுத்திருப்பது கர்நாடகா.


கர்நாடகவில் பொது இடங்களில் கன்னடத்தை தவிர்த்து இந்தியில் பெயர் பலகைகள் வைக்கப்படுவது தற்போது சர்ச்சையாக கிளம்பியுள்ளது. குறிப்பாக, விமான நிலையங்களில் கன்னட மொழி இன்றி இந்தியில் பெயர் பலகை வைத்திருப்பதற்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கொந்தளித்த கன்னட மக்கள்:


நெடுஞ்சாலைகளில் இந்தியில் பெயர் பலகை வைத்திருப்பதற்கு கடும் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். இச்சூழலில், நாடாளுமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி பேசிய வீடியோக்களை கன்னட மக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


வரும் ஏப்ரல் மே மாதம், கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பிரச்னை தேர்தலில் எதிரொலிக்குமா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்த நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதை வியூகமாக கையில் எடுக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


இந்தியாவுக்கு தேசிய மொழி எதுவும் இல்லாத நிலையில், இந்தியை தேசிய மொழி என்றும் பிற மொழிகளை இரண்டாம் தர மொழிகளாக பாவிக்கும் செயல் வட மாநிலங்களில் நடந்து வருகிறது. 


இதுகுறித்து, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், "இந்தியை மட்டும் 'தேசிய மொழி' ஆக்கி, கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளின் அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை" என்றார்.


ராகுல் காந்தியின் பதில் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே, "ராகுல் காந்தியுடன் கன்னடத்தின் அடையாளம் குறித்து விவாதம் நடந்தது. அப்போது, ​​அனைவருக்கும் தாய்மொழி முக்கியம் என்றார். அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது.


எனவே, இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கி, உங்கள் மொழியின் (கன்னட) அடையாளத்தை அச்சுறுத்தும் நோக்கம் இல்லை என அவர் (ராகுல் காந்தி) தெளிவாகக் கூறினார்" என்றார்.