பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்கிற வாதம் தீவிரமாகி வருகிறது. அண்மையில் விழா ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் “கலையை நாம் சரியாகக் கையாள வேண்டும். நாம் அப்படிச் செய்யத் தவறினால் நம்முடைய அடையாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படும். திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது, சோழ மன்னன் ராஜராஜ சோழன் இந்து அரசனாக சித்தரிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் கலை இலக்கியம் சினிமா என அத்தனையிலும் நடைபெற்று வருகிறது. நம் அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள நமக்கு நல்ல அரசியல் தெளிவு இருக்கவேண்டும்” எனக் கூறியிருந்தார். வெற்றிமாறனின் இந்தப் பேச்சு பல்வேறு தரப்பினரிடையே பல கருத்து மோதல்களை உருவாக்கியிருந்தது. அரசியலில் காங்கிரஸின் ஜோதிமணி உள்ளிட்ட பலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும் குஷ்பு உள்ளிட்டவர்கள் அவரது வாதத்தை மறுத்தனர்.
இதற்கிடையே பொன்னியின் செல்வன் தொடர்பான பிரஸ்மீட் ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “இந்து என்கிற சொல்லே ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. அது வெள்ளைக்காரர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடியை அவர்களுக்கு எளிதாக்கிக்கொள்ள Tuticorin என மாற்றியது போலதான் இதுவும்” எனப் பேசியிருந்தார். இது ராஜராஜ சோழன் குறித்தான சர்ச்சைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.
வெற்றிமாறன் , கமல்ஹாசன் சொல்வது சரியா? ராஜராஜ சோழன் இந்து இல்லையா?
மானுடவியல் ஆய்வுகள் இது தொடர்பான சுவாரஸ்யமான சில தகவல்களை நமக்குத் தருகின்றன. அமெரிக்க மானுடவியலாளர் பெர்னார்ட் எஸ்.கொஹன் இந்திய சமூகம் மற்றும் அதன் பண்பாடு தொடர்பான தனது “The Study of Indian society and culture" புத்தகத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். புத்தகம் வெளியான வருடம் 1996.
இந்து மதம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என சாதியக் கட்டமைப்புகளால் பிளவுபட்ட நான்கு வர்ணங்களை உள்ளடக்கியது என்கிறது வர்ணாசிரமம். இந்த நான்கு வர்ண முறை இந்திய சமூகத்தில் நிலவுவது குறித்து இரானிய அறிஞர் அல்-பிருனிதான் முதன்முதலில் தனது ’தாரிக்-அல்-இந்த்’ என்கிற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் என்கிறார் கொஹன். அல்-பிருனி 1030க்குப் பிறகுதான் இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்.அல்பிருனி ராஜராஜசோழனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்தவர் என்பது கூடுதல் தகவல்.
அல்பிருனிக்கு முந்தைய எந்த ஆய்வுகளிலும் இந்த நான்கு வர்ண முறை குறிப்பிடப்படவில்லை என்கிறார் பெர்னார்ட் கொஹன். அல்பிருனிக்குப் பிறகு அக்பரின் அவையில் இருந்த சில அறிஞர்களும் நான்கு வர்ண முறை குறித்துக் குறிப்பிட்டிருப்பதாக கொஹன் கூறுகிறார். அல்பிருனிக்கு சமஸ்கிருதம் தெரிந்ததால் அவரால் பார்ப்பனர்களுடன் எளிதில் உரையாட முடிந்தது என்றும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுதான் நான்கு வர்ண முறை என்றும் இது முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் தங்களுக்கு வகுத்துக்கொண்ட கோட்பாடு(Brahminic Theory) என அல்பிருனி மற்றும் அக்பர் அவையில் இருந்த அறிஞர்கள் குறிப்பிடுவதாகவும் கொஹன் கூறுகிறார். ஆனால் அல்பிருனி ஆய்வுகளில் எங்குமே இந்துமதம் என்கிற சொல் இடம்பெறவில்லை. அரேபியர்கள் காலத்தில் ‘இந்து’ என்கிற சொல் இல்லை வெறும் வர்ணம் மட்டுமே இடம்பெறுகிறது.
கூடுதலாக ஐரோப்பியர்கள் காலத்தில் பிரெஞ்சு அறிஞர்களால் பதிவு செய்யப்பட்ட இந்திய சாதிய முறைகள் குறித்தான ஆய்வுகளில்தான் முதன்முதலில் இந்து மதம் என்கிற சொல் இடம்பெறுவதாகவும் அது பார்ப்பனர்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்கிறார்.
சுருங்கச் சொன்னால், நால்வர்ணம் என்பது சமஸ்கிருதம் பேசும் பார்ப்பனர்கள் உருவாக்கியது மற்றும் இந்துமதம் என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவானது அதற்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பது ஆய்வாளர் பெர்னார்ட் கொஹன் வாதத்தின் வழியான விடை. கமலஹாசன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டதற்கான ஆதாரப்பூர்வமான தரவுகளும் இவைதான்.
சோழநாடு சோறுடைத்து அந்த வரலாற்றை இப்படிச் சேற்றில் புதைக்கவேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.