Mizoram Election 2023: இயந்திரக் கோளாறு காரணமாக மிசோரம் முதலமைச்சர் ஜோராம் தங்கா வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினார்.
வாக்களிக்காத மிசோரம் முதலமைச்சர்:
மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் தொடங்கி 100 வயதை கடந்த நபர்கள் வரை வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்த வகையில் மாநிலத்தின் முதலமைச்சரும், ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவரருமான ஜோராம் தங்கா வாக்களிக்கச் சென்றார். ஐஸ்வால் வடக்கு-II சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 19-ஐஸ்வால் வெங்கலை-I YMA ஹால் வாக்குச் சாவடியில் வாக்களிக்க சென்றபோது, ஆவணங்கள் அனைத்தும், சரிபார்க்கப்பட்டு வாக்களிக்கவும் சென்றார். ஆனால், கடைசி நேரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரால் வாக்களிக்க முடியவில்லை.
முதலமைச்சர் விளக்கம்:
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த முறை தொங்கு சட்டப்பேரவையாக இருக்காது. மிசோ தேசிய முன்னணியின் அரசாக அமையும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. வாக்களிப்பதற்காக இங்கு வந்தேன். வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை. அதனால் எனது தொகுதிக்கு சென்று பார்வையிட்டுவிட்டு காலை கூட்டம் முடிந்தவுடன் வந்து திரும்ப வாக்களிப்பேன் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்” என்றார்.
மிசோரம் வாக்குப்பதிவு:
40 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4 பேர் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 1276 வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 4,13,064 ஆண்கள், 4,39,028 பெண்கள் என மொத்தம் 8 லட்சத்து 52 ஆயிரத்து 88 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் போலீசாரும், மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன.