5 State Elections: சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.


5 மாநில தேர்தல்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக தான், தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் கருதப்படுகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆட்சி செய்யும் மத்தியபிரதேசம், சந்திரசேகராவ் முதலமைச்சராக உள்ள தெலங்கானா மற்றும் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 


சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குப்பதிவு:


காங்கிரஸின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 5 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் 3 அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சிக்கல் நிறைந்த பகுதிகளில் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 40 லட்சத்து 78 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தொகுதிகளில், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 25 பேர் பெண்கள் ஆவர். 


பாதுகாப்பு பணிகள் தீவிரம்:


வாக்களிக்க வரும் பொதுமக்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 40,000 மத்திய ஆயுத போலீஸ் படையினர் மற்றும் மாநில காவல்துறையை சேர்ந்த 20 ஆயிரம் பேர் என மொத்தம் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்சல் நடவடிக்கையை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதோடு,  வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் மோப்ப நாய் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


மிசோரம் வாக்குப்பதிவு:


40 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4 பேர் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 1276 வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  4,13,064 ஆண்கள்,  4,39,028 பெண்கள் என மொத்தம் 8 லட்சத்து 52 ஆயிரத்து 88 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் போலீசாரும், மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.