இதெல்லாம் சினிமாவில் தான் நடந்தது. மறுமணத்தை இந்த சமுதாயம் ஏற்றுக்கொண்டாலும் கூட சமீப நாட்கள் வரை அது இளம் வயதில் கணவரை இழந்த, பிரிந்த பெண்களுக்கே சாத்தியமாக இருந்தது. 


அண்மைக்காலமாகத்தான் தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் பிள்ளைகள் உருவாகி வருகின்றன. அன்பு 50, 60-ஆன போதும் மலரும் என்று அவ்வை சண்முகியில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் உருகுவது போல் துணைக்கான நியாயமான தேடல் எப்போதுமே தவறவில்லை என்ற புரிதல் இப்போது சமூகத்தில் மேலோங்கி வருகிறது. அதுவும் குறிப்பாக பெண்ணின் துணை தேடல் மீதான பார்வை முற்றிலுமாக மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் மகள் ஒருவர் சமூகவலைதளம் மூலம்  தனது தாய்க்கு துணை தேடினார். அந்த ட்வீட் மிகப் பெரிய செய்தியானது.






அசதா வர்மா என்ற அந்த யுவதி ட்விட்டரில் தனது தாயுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, எனது தாய்க்கு 50 வயது மதிக்கத்தக்க அழகான குடிப்பழக்கம் இல்லாத நல்ல நிலையில் இருக்கும் வரன் தேவை என்று கூறியிருந்தார். அண்மையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே ஒரு கிராமத்து தாய்க்கு அவரது மகன் துணை தேடி வைத்து திருமணம் செய்து வைத்தார். சித்தார்த்தன் என்ற அந்த இளைஞர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்ததை ஒரு புத்தகமாகவே எழுதி கவனம் ஈர்த்தார். ரைட் டூ மேரி (Right to Marry) என்று அந்தப் புத்தகத்திற்கு அவர் தலைப்பு வைத்தார்.


சொல்லப்போனால் சமூகத்தில் இப்போது தான் பெண்ணுக்கு திருமணத்துக்கான உரிமை எத்தனை வயதிலும் இருக்கிறது என்ற புரிதல் வந்திருக்கிறது.


இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது இளம் பெண்ணும், இளைஞரும் சேர்ந்து தங்களின் தாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது. இந்தத் திருமணம் இந்தியாவில் நடந்துள்ளது என்பது மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஊர், திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், அந்தப் பிள்ளைகள் என யாருடைய அடையாளமும் தெரியவில்லை.



@alphaw1fe என்ற ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து அந்தப் பெண் தனது தாயின் திருமண புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.






நான் எனது 15-வது வயதில் இருந்து அம்மாவை மறுமணம் செய்யச்சொல்லி வருகிறேன். ஆனால் அது இன்று நிறைவேறி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் விஷம் தோய்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட அம்மா இன்று அவருக்கான வாழ்க்கையில் இணைந்துள்ளார். நானும் சகோதரனும் ஆண் துணை இல்லாமல் வாழ்ந்து விட்டோம். இப்போது எங்கள் வாழ்வில் அப்பா கிடைத்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.


தாய்க்கு மெஹந்தி இடும் நிகழ்ச்சி, மோதிரம் மாற்றும் நிகழ்ச்சி, அரங்க அலங்காரம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசித்து ட்விட்டரில் ஆவணப்படுத்தியுள்ளார் மகள். மகனும் சும்மா இல்லை. அவரும் தாய்க்கு வாழ்த்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.


இந்த ட்வீட்களுக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கும் வாழ உரிமை இருக்கிறது. மணமுறிவு, கணவர் இறப்பு ஆகியனவற்றால் பாதிக்கப்படும் பெண், குழந்தைகள் இருக்கின்றன என்பதற்காகவே இன்னொரு வாழ்க்கையை யோசிக்கக் கூட என்பதில்லை. அந்தத் தாயின் மனதில் மீண்டும் காதல் அரும்பி அது கல்யாணமாக முடிந்ததற்கு வாழ்த்துகள். கடவுள் தம்பதியை ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.