இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா பல்கார் மாவட்டம் ஜவ்ஹார் தாலுக்காவுக்கு தடுப்பூசிகள் ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்பட்டன. மகாராஷ்டிரா -குஜராத் எல்லையில் அமைந்துள்ள இந்த மாவடம் மிகவும் பின்தங்கிய ஒன்றாக கருதப்படுகிறது.
ஜவ்ஹாரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ட்ரோன் இன்று காலை 9.39 மணிக்கு ஜாப் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்றடைந்தது
இந்த இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் நேரம் 70 நிமிடங்கள். ஆனால், ட்ரோன் மூலம் வெறும் 9 நிமிடங்களில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதித பாதுகாப்பாகவும், மிக விரைவாகவும், கொரோனா தடுப்பூசிகளை ட்ரோன் கொண்டு வந்ததை ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர்.
ஆகாயமார்க்கமாக மருந்துகள் விநியோகிக்கும் திட்டத்தை, முதல் முறையாக தெலங்கானா விக்காராபாத்தில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.
மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து போன்ற இடங்களில், தடுப்பூசிகளை விநியோகிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள 3000 மீட்டர் தூரத்துக்கு ட்ரோன்களை பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. சிஎஸ்ஐஆர்-என்ஏஎல் தயாரித்த மல்டி காப்டர் ட்ரோன் மூலம் பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ள சந்திரபுரா ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து, ஹரகாடே ஆரம்ப சுகாதார மையத்துக்கு 50 குப்பிகள் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மற்றும் ஊசிகள் ஒரு பெட்டியில் வைத்து அனுப்பப்பட்டன
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்