Miss India 2023 : 2023 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிஸ் இந்தியா 2023
ஆண்டுதோறும் ஃபெமினா இதழ் சார்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு 71வது மிஸ் இந்தியா போட்டிக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 30 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மணிப்பூர் மாநிலம் இம்பாலின் உள்ள மைதானத்தில் நேற்று இதன் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் 2023-ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா (19) தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் இரண்டாவது இடத்தை டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா, மூன்றாவது இடத்தை மணிப்பூரைச் சேர்ந்த தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் பெற்றுள்ளனர்.
யார் இந்த நந்தினி குப்தா?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி குப்தா (19). லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். 10 வயதில் இருந்தே மாடலிங் துறையில் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்ட இவர், தற்போது மிஸ் இந்தியா 2023 பட்டத்தை வென்றுள்ளார்.
இதுபற்றி மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”உலகமே அவள் வருகிறாள்...வசீகரத்தாலும், தனது அழகுனாலும் அனைவரின் நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களின் கடின உழைப்புக்கு கிடைந்த அங்கீகாரம் தான் மிஸ் இந்தியா 2023 பட்டம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி குப்தா, இந்தியா சார்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயா பூஞ்சா
இவரை தொடர்ந்து, இரண்டாவது இடத்தை டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா (22) பெற்றார். டெல்லியில் பட்டப்படிப்பை முடித்த இவர் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். தனது 19 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார். 2019ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த மாடலிக் போட்டியில் பங்கேற்று தன்னுடைய முதல் வெற்றியை பதித்தார்.
மேலும், புகழ்பெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மணீஷ் மல்ஹோத்ரா, ராகவேந்திர ரத்தோர் மற்றும் நீதா லுல்லா ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் தீவிர ரசிகை இவர். இந்நிலையில், நேற்று நடந்த மிஸ் இந்தியா 2023ல் இரண்டாம் இடத்தை பெற்றார்.
மேலும் படிக்க