ஆந்திராவில் சிறுவர்கள் காரை தாறுமாறாக ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சாலை.. பணக்காரர்களுக்கு பயணப்பாதை மட்டும்தான் ஆனால் பரம ஏழைகள் பலருக்கும் அதுவே வாழ்விடம்.
பெரும்புள்ளிகளும் அவர்கள் வீட்டின் கொழுத்த கன்றுக்குட்டிகளும் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி ஏற்படுத்தும் விபத்துகளுக்கு ஆண்டுதோறும் பலியாவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. மனிதன் படத்தில் நீதிமன்ற காட்சியில் வழக்கறிஞராக நடித்துள்ள உதயநிதி வைக்கும் ஒவ்வொரு வாதமும் சமூகத்தின் முகத்தில் அறையும் வகையறா. ஆனால் அத்தகைய கார் விபத்துகள் தான் குறையவில்லை.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது தெனாலி நகரம். இங்குதான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தெனாலி டவுனில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் சாலையில் மூன்று பேர் ரிக்ஷாவை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மூன்று சிறார்கள் ஒரு காரில் வந்தனர். அந்த கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்தோர் பலரும் ஏதோ அசம்பாவிதத்தை கணித்திருக்க வேண்டும். அப்போது அந்த கார் சாலையில் ரிக்ஷாவை பழுது நீக்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கால் சம்பவ இடத்திலேயே துண்டானது. மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தெனாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சல்மான் கான் வழக்கு:
ரேஷ் டிரைவிங் கார் விபத்து வழக்கு என்றாலே சல்மான் கானின் லேண்ட் க்ரூய்ஸர் கார் வழக்கை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் சல்மான் கான் தாறுமாறாக காரை ஓட்டியதில் சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏறியது. சல்மான்கான் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் சல்மான் கான் தரப்பிலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
சட்டம் அவருக்கு சாதகமானது. நடிகர் சல்மான் கான் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 2002 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு சல்மான் கான் அன்று விடுதலையானார். குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதால் அவர் விடுதலையானார். ஆனால், இன்னமும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சொகுசுக் காருக்குள் இருந்து பார்ப்பவர்களுக்கு பிற உயிர்கள் எப்படித் தெரியும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது போல!