மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தை அந்தப் பகுதி மக்கள் ‘கடற்கரை’யாக மாற்றி தனித்துவமான ஒரு போராட்டத்தை அண்மையில் நடத்தியுள்ளார்கள்.
மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புத் தேர்தல்களுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனுப்பூர் மற்றும் பிஜூரி மனேந்திரகர் இடையே உள்ள சாலையின் மோசமான நிலையை நிர்வாகம் கவனிக்கும் என்ற நம்பிக்கையில் அனுப்பூர் மாவட்ட மக்கள் இதனைச் செய்துள்ளார்கள். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க இதுதொடர்பாக கடுமையாக ஏதாவது செய்ய முடிவு செய்தனர். இதை அடுத்து ஒரு பெரிய பள்ளம், தண்ணீரால் நிரப்பப்பட்டது, அவர்களின் தனித்துவமான எதிர்ப்புக்காக 'கடற்கரையாக' மாற்றப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதி மக்கள், குழியைச் சுற்றியுள்ள பகுதிகளை மலர்களால் அலங்கரித்து, பெஞ்சுகள் வைத்து, உணவுக் கடைகளை அமைத்து தங்களது நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
பழுதடைந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், நிர்வாகத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால், போராட்டத்திற்கான யோசனை வந்தது. போதிய பதில் கிடைக்காததால் எரிச்சலடைந்த அந்தப் பகுதியில் உள்ள வார்டு வாசிகள் மற்றும் வியாபாரிகள், ஒரு பெரிய பள்ளத்தை கடற்கரையாக மாற்ற முடிவு செய்தனர்.
அது தொடர்பாக ஆன்லைனில் பரவலாகப் பரப்பப்பட்ட ஒரு வீடியோ, குடியிருப்பாளர்கள் தங்களுடைய தற்காலிக கடற்கரைக்கு அருகில் பெஞ்சுகள் மற்றும் நாற்காலிகளில் அமர்ந்து தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை ரசித்து மகிழ்வதைக் காட்டுகிறது. கடற்கரை போல கூடுதல் எஃபெக்ட் கொடுக்க பின்னணியில் இசையும் ஒலிக்கிறது.
ஒரு பிரபல செய்தி நிறுவன அறிக்கையின்படி, பள்ளங்கள் நிறைந்த சாலையில் ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளூர்வாசிகள் மிகவும் சவாலை எதிர்கொண்டனர். கனரக டிரெய்லர் வாகனங்கள், நிலக்கரி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இந்த சாலையில் அடிக்கடி செல்வதால், சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையும் சாலையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிகம் எரிச்சல் அடைவதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. வட இந்தியப் பகுதிகளில் சாலைகளின் மோசமான நிலை என்பது இது முதன்முறை அல்ல. சமீபத்தில் பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ட்ரோன் ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம் சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருப்பதைக் காட்டுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அடுத்தடுத்து நீச்சல் குளம் பெரிய சாலையில் உருவாக்கப்பட்டிருப்பது போல ஒரு தோற்றத்தை அது கொடுத்தது.