சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கும்பல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாட்டிறைச்சியை கடத்துவதாக கூறி, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.


கடந்த 2015ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் மாட்டிறைச்சியை வைத்திருப்பதாக கூறி, 51 வயது நபரான அக்லக், கொடூர கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படிப்பட்ட கும்பல் கொலை சம்பவங்கள் பெரும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது.


தொடர் பதற்றத்தை உண்டாக்கும் கும்பல் வன்முறை:


பெரும்பாலும், மதவாத வெறுப்பின் அடிப்படையில்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்கிறது. இதற்கு, எதிராக உச்ச நீதிமன்றம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, கும்பல் கொலைகளை கொடூரமான செயல்கள் என கண்டித்த உச்ச நீதிமன்றம், இதை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட்டு, தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தது. கும்பல் வன்முறையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பு எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும், கும்பல் வன்முறைகள் தொடர்வதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. 


அப்போது, ஆஜரான மூத்த வழக்கழிஞர் கபில் சிபல், "இம்மாதிரியான சம்பவங்கள் பல மாநிலங்களில் நிகழ்கின்றன. பாதிக்கப்பட்டவர்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு செல்லுமாறு சொல்லக் கூடாது. அப்படி சென்றாலும், அவர்கள் தலா 2 லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பெறுவார்கள்" என வாதிட்டார்.


கும்பல் வன்முறைகளும் கொலைகளும் தொடர்ந்து வருகிறது என்றும் அவற்றை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்றும் தெஹ்சீன் பூனாவாலா வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இதை மேற்கோள் காட்டி வாதம் முன்வைத்தார் கபில் சிபல்.


சாட்டையை சுழற்றிய உச்ச நீதிமன்றம்:


இந்த வாதத்தை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், "போலிச் செய்திகள், பொய்யான தகவல்களை ஊட்டுவதால் வெறிபிடித்த கும்பல்களின் வன்முறை சம்வபங்கள் அதிகரித்து வருகிறது. அது, நாட்டை அரக்கன் போல விழுங்குவிடும். எனவே, பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் பிறக்கிறோம்" என தெரிவித்தது.


இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உள்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, கும்பல் வன்முறை தொடர்பான தனி வழக்கில், கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை கேட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியது.


நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள், பதவி செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பான ஆண்டு வாரியான தரவுகளை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.