மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. 


பரபரப்பாகும் தேர்தல் களம்:


கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.


ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணி ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களிலும் சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.


அதற்கு ஏற்ற வகையில், கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது பாஜக. கட்சிக்கு புதிய தேசிய துணை தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனியை பாஜகவின் தேசிய செயலாளராக அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார்.


பாஜகவில் அதிரடி மாற்றங்கள்:


உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஸ்மாண்டா பிரிவு இஸ்லாமியரான தாரிக் மன்சூர், பாஜகவின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) முன்னாள் துணைவேந்தரான இவர், தற்போது சட்டமேலவை உறுப்பினராக உள்ளார். தெலங்கானா மாநில முன்னாள் பாஜக தலைவரான பண்டி சஞ்சய் குமார், தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
அதேபோல, பாஜகவின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரான சி.டி. ரவி, தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து  விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது, கட்சியில் மேற்கொண்டுள்ள முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக பாஜக தலைவராக ரவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.


அதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் சைகியா. தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சி.டி. ரவியும் திலீப் சைகியாவும் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


பீகார் மாநிலத்தின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங், கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பெரும்பாலான துணை தலைவர்கள், பொது செயலாளர்கள் தங்களின் பதவியை தக்க வைத்துள்ளனர்.