ஜூலை மாதத்திற்கான தண்ணீர் நாயகர்கள் போட்டியில் வென்றவர்களின் பட்டியலை ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கிற்கு ஏற்ப, தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் குறித்த இயக்கத்தை மக்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தண்ணீர் நாயகர்கள் என்ற போட்டியை கடந்த 2019 ம் ஆண்டு முதல் தொடங்கியது. 






இந்த மாதாந்திர போட்டியின் முதல் பதிப்பு 01.09.2019 முதல் 30.08.2020 வரையிலும், இரண்டாவது பதிப்பு 19.09.2020 முதல் 31.08.2021 வரையிலும் நடத்தப்பட்டது. மூன்றாவது பதிப்பு 01.12.2021 முதல் தொடங்கப்பட்டு, இந்தாண்டு 30.11.2022 வரை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி மைகவ் வலைதளத்தில் துவங்கப்பட்டு பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான போட்டியில் வெற்றி பெற்ற ஆறு பேரின் பெயர்களை ஜல்சக்தி அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. இவர்களுக்கு ரொக்க பரிசாக ரூ.10,000 பணமும்,  சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது. 


இதில், சென்னை ஆழ்வார்பேட்டை ஆஷியானா அப்பார்ட்மெண்டைச் சேர்ந்த புவனா பஞ்சநாத், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன், வீடுவீடாகச் சென்று அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில் தண்ணீரை பயன்படுத்துவதற்கான மீட்டர்கள் பொருத்தப்பட்டு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தண்ணீரின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கழிவுநீர் மறுசுழற்சி மூலம் சுத்திகரித்து, தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் வருகிறது. இதன் காரணமாக புவனா பஞ்சநாத் ஜூலை மாதத்திற்கான தண்ணீர் நாயகர்கள் போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த மனிஷ் ராஜ்புத், உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் சிங், மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரைச் சேர்ந்த சிவாஜி கட்கே, ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த டாக்டர் டி. வசந்த லஷ்மி, மற்றும் மகேந்திர குமார் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.