மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டியோடரன்ட் விளம்பரம் ஒன்றை நீக்குமாறு ட்விட்டர், யூட்யூப் முதலான தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 


Layer’r Shot நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த விளம்பரத்தைக் கட்டுப்பாட்டு ஆணையமும் விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறியுள்ளதோடு, அதனை நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது. 


கடந்த மே 4 அன்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ட்விட்டர், யூட்யூப் முதலான நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விளம்பரம் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 அளித்துள்ள விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 






மேலும், அந்தக் கடிதத்தில், `ஒரு நிறுவனத்தின் விளம்பரமான அந்த வீடியோவைப் பல்வேறு பயனாளர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்’ எனக் கூறப்பட்டுள்ளது. 



இந்த விளம்பரங்களை நெட்டிசன்கள் பலரும் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிப்பதாக விமர்சித்துள்ளனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் யூட்யூப் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், ஒரு விளம்பர வீடியோ சுமார் 10 லட்சம் முறை பார்க்கப்பட்டிருப்பதோடு, பல முறை பகிரப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.






`தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வீடியோ பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும்’ என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விளம்பரங்கள் தரக் கட்டுப்பாட்டு கவுன்சில் சார்பிலும் இந்த வீடியோ விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் பொது நலனுக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அது நீக்கப்பட வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.