பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமரை சந்தித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். 


“டெல்லி வரும்போது தன்னை சந்திக்குமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி அவரை இன்று சந்தித்தேன். நீட் தேர்வு விலக்கு குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவரும் சில விளக்கங்களை கொடுத்தார். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமரிடம் தெரிவித்தேன். நீட் தேர்வு குறித்த தமிழக மக்களின் மனநிலையை பிரதமரிடம் எடுத்து கூறினேன். மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரினேன். கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை தருமாறு பிரதமரிடம் கேட்டேன்” எனத் தெரிவித்தார்.


பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். 


கவனம் பெற்ற டெல்லி பயணம் 


தமிழ்நாடு அரசின்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக அவர் பொறுப்பேற்றப்பின் முதல்முறையாக டெல்லிக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் அதீத கவனம் பெற்றது. 


நேற்றைய தினம் டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் டெல்லி தமிழ்ச் சங்கத்தலைவர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். தொடர்ந்து டெல்லி முத்தமிழ்ப் பேரவை டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகளையும் அவர் சந்தித்தார். பின்னர் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப்பின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


பின்னர் இன்றைய தினம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு மகளிர் மேம்பாடு, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிற ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது