தேசிய தணிக்கை குழு முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.


ஒரு கி.மீ. சாலைக்கு ரூ.251 கோடியா?


மத்திய தணிக்கைக் குழு அண்மையில் வெளியிட்டு இருந்த அறிக்கையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால், கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பாரத் மாலா' திட்டத்தில் துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையும் அடங்கும். அந்த திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை போடுவதற்கு ரூ.18 கோடியே 20 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.251 கோடியாக செலவு உயர்ந்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. 


மற்ற குற்றச்சாட்டுகள்:


”சுங்கச்சாவடிகள் விதிகளை மீறி பொதுமக்களிடம் இருந்து ரூ.154 கோடி ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே மொபைல் எண்ணின்  மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி வளர்ச்சி திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு விதிமுறைகளை மீறி தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஓய்வூதிய திட்டத்தின் பணத்தை பிரதமரின் விளம்பர செலவிற்காக பயன்படுத்தியுள்ளது. HAL நிறுவனத்தில் விமான இன்ஜின் வடிவமைப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாட்டால் ரூ.154 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” போன்ற குற்றச்சாட்டுகளும் தணிக்கை குழுவால் முன்வைக்கப்பட்டுள்ளன.


ரூ.7.5 லட்சம் கோடி:


தணிக்கை குழு அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஏற்கனவே இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் சாதனைகள் அனைத்தையும் உடைத்து, பாஜக அரசு ஊழலில் புதிய சாதனை படைத்து வருவதாகவும் சாடி வருகின்றன. மத்திய தணிக்கை குழு அறிக்கையின்படி, பாஜக அரசு ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.  


நிதின் கட்காரி அதிருப்தி:


இந்த நிலையில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய உயர் அதிகாரிகள், உரிய பதில் அளிக்காததற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த மெத்தனத்துக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.


மத்திய அரசு தரப்பு விளக்கம்:


இதுதொடர்பாக பேசிய மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் “ ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கான கட்டுமான செலவில், மேம்பாலங்கள் மற்றும் சுற்று சாலைகள் ஆகியவற்றுக்கான செலவு சேராது என்று தணிக்கை குழுவே கூறியுள்ளது. இச்சாலையில், மேம்பாலங்கள், கடவுப்பாதைகள், சுரங்க பாதைகள் ஆகியவை இடம்பெற்று இருப்பதால் செலவு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஹரியானாவில் மேம்பாலங்கள் கட்டியதால் செலவு அதிகரித்தது. துவாரகா விரைவு சாலைக்கு சராசரி கட்டுமான செலவாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.206 கோடி என நிர்ணயித்து, டெண்டர் கோரப்பட்டது. இறுதியாக, கிலோ மீட்டருக்கு ரூ.181 கோடியே 94 லட்சத்துக்குத்தான் டெண்டர் விடப்பட்டது. இந்தவகையில், மதிப்பீட்டை விட 12 சதவீத தொகை சேமிக்கப்பட்டுள்ளது. இதை தணிக்கை குழு கவனிக்கவில்லை” என விளக்கமளித்துள்ளனர்.