தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ள 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார்.


பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு பயணம்:


இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு, பிரிக்ஸ் உச்சிமாநாடு முதல்முறையாக நேரடியாக நடைபெற உள்ளது. பிரிக்ஸ் அமைப்பினால் தொடங்கப்பட்ட முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், எதிர்கால செயல்பாடுகளை அடையாளம் காண்பதற்கும் இந்த உச்சிமாநாடு வாய்ப்பளிக்கும்.


பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பிறகு நடத்தப்பட உள்ள 'பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் டயலாக்' என்ற சிறப்பு நிகழ்விலும் பிரதமர் பங்கேற்கிறார். தென்னாப்பிரிக்காவால் அழைக்கப்பட்ட பிற நாடுகளும், இதில் கலந்து கொள்ளும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரிக்ஸ்  அமைப்பில் சேர லைன் கட்டும் நாடுகள்:


ஈரான் உட்பட பல புதிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் சேர்ப்பது குறித்து உச்ச மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. சுமார் 40 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியா, அர்ஜென்டினா, கஜகஸ்தான், கொமோரோஸ், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக தென்னாப்பிரிக்க அரசின் உயர் மட்ட அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


ஜோஹன்னஸ்பர்க்கில் மற்ற தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வ பயணமாக கிரீஸ் செல்கிறார்.


பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய அமைப்புதான் பிரிக்ஸ். இவை வளர்ந்து வரும் அல்லது புதிதாக தொழில்மயமாகி வரும் நாடுகள் ஆகும். இதில் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகிறது.


கிரீஸ் பயணம்:


கிரீஸ் பயணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், "40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தியாவும் கிரீஸும் நாகரீக உறவுகளை பேணி பாதுகாத்து வருகின்றன. கடல் போக்குவரத்து, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், மக்களிடையேயான உறவுகள் போன்ற விவகாரங்களில் ஒத்துழைப்பதன் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் இரு நாட்டு உறவு வலுப்பெற்றுள்ளன. 


உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். இரு நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடனும், கிரேக்க வாழ் இந்தியர்களுடனும் அவர் உரையாட உள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.