மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் தன் பூனையுடன் விளையாடிய நாய் மீது பெண் ஆசிட் வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் விமசர்னத்திற்குள்ளாகியுள்ளது.


நடந்தது என்ன?


மும்பையின் மலாட் பகுதியுள்ள உள்ள மல்வானி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷபிஸ்தா அன்சாரி. இவர் பூனை ஒன்றை வளர்ப்பு பிராணியாக வைத்துள்ளார். இதே குடியிருப்பு பகுதியில் துகாராம் என்பவர் பிரெளனி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு திடீரென கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக துகாராம் தெரிந்துகொள்ள விரும்பியிருக்கிறார். உடனே, குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளைப் பார்க்க திட்டமிட்டுள்ளார். வீடியோ காட்சிகளில் நாய்க்கு நடந்ததை கண்டபோது அவர் அதிர்ச்சியாகியுள்ளார். 






நாய் மீது ஆசிட் வீச்சு


சி.சி.டி.வி. காட்சிகளின்படி, அன்றைய தினத்தில் நாய் விளையாடி கொண்டிருந்தது. அப்போது. சபிஸ்தா அன்சாரி நாய் மீது ஆசிட் வீசிவிட்டு செல்கிறார். இந்தக் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரெளனிக்கு ஒற்றை கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் நாய் கண்களை இழந்துள்ளதுடன், உடல் முழுவதும் காயமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.


போலீஸ் விசாரணை


இந்த சம்பவம் தொடர்பாக அன்சாரி மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


அப்போது வீடியோவில் இருந்தவர் மல்வானி பகுதியைச் சேர்ந்த ஷபிஸ்தா சுஹைல் அன்சாரி (35) என்பது தெரிய வந்தது. அவர் மீது விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதுகுறித்து துகாராம் கூறுகையில், ”பூனையுடன், என்னுடைய நாய் விளையாடுவது வழக்கம். ஆனால், அதற்கு சபிஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாயை விளையாட விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நானும் என்னுடைய நாயைக் கட்டுப்படுத்தினேன், இருப்பினும் என்னுடைய நாய் பிரௌனி அந்தப் பூனையுடன் தொடர்ந்து விளையாடியதும், அத்துடன் தங்கியதும் அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே இப்படிச் செய்திருக்கிறார்" என்றார்.


கண்களை இழந்து காயமடைந்த பிரெளனி என்ற நாயை தொலைக்காட்சி நடிகரான ஜெயா பட்டாச்சார்யா மற்றும் அவரது குழுவினர் மீட்டு தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரெளனி என்ற நாய் அந்தக் குடியிருப்பு பகுதியில் ஐந்தாண்டுகளாக துகாராமுடன் வசித்து வருகிறது. ஆட்டோ ஓட்டுநரான இவர் பிரெளனியை அன்புடன் வளர்த்து வருகிறார். 


இந்த சம்பவம் தொடர்பாக ஜெயா கூறுகையில், “பூனைக்கு உணவிட்டு வளர்ப்பரே இப்படி நாய் மீது ஆசிட் வீச துணிந்துள்ளார் என்பது வேதனையாக உள்ளது. இரண்டும் உயிர்களே. இருவருக்கும் வாழ்வதற்கான உரிமையுள்ளது.”என்று தெரிவித்தார்.