மின்சாரத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளில் ஒன்று அணுசக்தி ஆகும். அணுசக்தி நிலையங்களின் செயல்திறன் 33 சதவிகிதத்தில் இருந்து 37 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. 


அணுசக்தி மின்சாரம்:


ஆனால், சுற்றுச்சூழலில் அணுசக்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதால், படிப்படியாக அணுசக்தி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, "எதிர்காலத்தில் அணுசக்தி பயன்பாட்டை நிறுத்த அரசாங்கத்திடம் திட்டம் எதுவும் இல்லை. 2031க்குள் 1.05 லட்சம் கோடி ரூபாய் செலவில் 10 அணுசக்தி உலைகளை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அணுசக்தி பயன்பாட்டை நிறுத்த திட்டம் இருக்கிறதா..?


மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி, "எதிர்காலத்தில் அணுசக்தி பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, படிப்படியாக மரபுவழி எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறதா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு, நோ, சார் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். 


இது தொடர்பாக எழுப்பப்பட்ட தனிப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "தலா 700 மெகாவாட் திறன் கொண்ட 10 உள்நாட்டு அழுத்தக் கன நீர் உலைகளை அமைக்க மத்திய அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது.


கர்நாடகாவில் கைகா, ஹரியானாவில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தில் சுட்கா ஆகிய இடங்களில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள மஹி பன்ஸ்வாராவில் நான்கு அணு உலைகள் கட்டப்படும்.


இந்த அணுஉலைகள் 2031ஆம் ஆண்டுக்குள் 1,05,000 கோடி ரூபாய் செலவில் படிப்படியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அணு சக்தி நிலையங்கள் அமைப்பதற்காக அரசாங்கம் 2015 இல் அணு ஆற்றல் சட்டத்தை திருத்தியுள்ளது" என்றார்.


அணு சக்தி ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, 20 அணுசக்தி உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது.


மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கூடுதலாக 5,300  மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுசக்தி நிலையங்களுக்கு எதிராகவும் புதிதாக அமைக்கப்பட உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.