மதிய உணவு திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிக்கன் மற்றும் பருவ காலத்திற்கு ஏற்ப பழங்களைத் தர மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது வரும் ஏப்ரல் மாதம் வரையில் வழங்கவே திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான மதிய உணவு திட்டத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி ஏப்ரல் வரை அத்துடன் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அந்தந்த பருவத்தில் விளையும் பழங்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் வரை இது வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 11.6 மில்லியன் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு இதற்காக ரூ.371 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உணவுத் திட்டத்தால் அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் செலவிடும் பணத்தில் கூடுதலாக ரூ.20 செலவு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16 வாரங்களுக்கு செயல்படுத்தப்படும் நிலையில் அரசுக்கு ரூ.320 கோடி கூடுதலாக செலவாகும். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மேற்குவங்க அரசுடன் மத்திய அரசு செலவை 60:40 என்ற வீதத்தில் பங்கிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு 60 சதவீதம் செலவிடுகிறது.


பஞ்சாயத்து தேர்தல் காரணமா?
இந்நிலையில் மேற்குவங்க அரசு பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊழல் வழக்குகளில் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் நிறைய பேர் சிக்கியுள்ள நிலையில் கிராமப்புற மக்களின் அபிமானத்தைப் பெறவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் கட்சிகளுக்கு இடையேயான மோதலுக்கு பஞ்சம் இருக்காது. அடிதடி, வெட்டு குத்து, துப்பாக்கிச் சூடு என்பது வரை இந்த மோதல்கள் நீளும். 
இந்நிலையில் சமீப காலமாக கிராமப்புறங்களில் திரிணாமூல் கட்சிக்கு மவுசு குறைந்துவிட்டதாக எழுந்த உளவுத் துறை ரிப்போர்ட்டை அடுத்தே மதிய உணவு திட்டத்தை மேம்படுத்தி சாமான்ய மக்களின் அபிமானத்தைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


முன்மாதிரி தமிழகம்:
மதிய உணவு திட்டமாகட்டும், சத்துணவுத் திட்டமாகட்டும் அல்லது காலை சிற்றுண்டி திட்டமாக இருக்கட்டும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகள் வெளியிடப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


திங்கட்கிழமை காலை எதாவது ஒரு உப்புமா வகை மற்றும் காய்கறி சாம்பார் அளிக்கப்படும். செவ்வாய்க்கிழமை எதாவது ஒரு காய்கறி கிச்சடி கொடுக்கப்படும் நிலையில், புதன்கிழமை அன்று பொங்கலுடன் காய்கறி சாம்பார் மற்றும் வியாழக்கிழமை உப்புமா வகையுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை எதாவது ஒரு கிச்சடி வகையுடன் கேசரியும் வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி வாரத்தில் இரு நாட்களுக்கு உள்ளூர் சிறுதானியங்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.