உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரிபுராவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும்.


ராமர் கோவில் கட்ட நீதிமன்றங்களில் தடை போட்டது காங்கிரஸ். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் கோவில் கட்டும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்" என்றார்.


வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 


1990களில், ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்திதான், தேசிய அளவில் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுத்தது.


தற்போதைய மதிப்பீட்டின்படி, ராமர் கோயில் மற்றும் வளாகத்தின் மொத்த கட்டுமானச் செலவு தோராயமாக 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என ராமர் கோயில் அறக்கட்டளை கணித்துள்ளது. 


சன்னதி மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தள மேல்கட்டமைப்பின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன என அறக்கட்டளை சமீபத்தில் தெரிவித்தது.


“2023 டிசம்பரில் பக்தர்களுக்கு ஸ்ரீ ராம் லல்லா தரிசனம் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, யாத்திரை வசதி மையத்தின் கட்டுமானப் பணிகள், வளாகத்தில் உள்ள பிற பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 


ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செப்டம்பர் 11 அன்று கூடி முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு செய்தது. கோயிலின் இந்த மேற்கட்டுமானம் 6.5 மீ (21 அடி) உயரமான பீடத்தின் மீது கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதன் நேரடி சுமை குறைக்கப்படும். 


 






பெரும்பாலான பழமையான கோயில்கள் இயற்கையான பாறை அடுக்குகளில் கட்டப்பட்டதால், ஸ்ரீராமர் கோவியின் பொறியாளர்களின் கூட்டமைப்பு பீடம் வேலைக்காக கிரானைட் கல்லை பயன்படுத்தி உள்ளது. பிப்ரவரி 2022 இல் தொடங்கப்பட்ட பீடம் கட்டுமானப் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன.


ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியை கட்டுவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ள அறக்கட்டளை இது தொடர்பான தகவலை பகிர்ந்தது.