25 ஆண்டு கால கோரிக்கை
தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்து வந்தது. 4393.37 சதுர கி.மீ பரப்பளவுள்ள இம்மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 39.99 லட்சம் ( மக்கள் தொகை அதிகரித்து வருகிறது) மக்கள் வசிக்கின்றனர். 4 வருவாய் கோட்டங்கள், 11 வட்டங்கள், 9 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 633 ஊராட்சிகள் மற்றும் 1,137 கிராமங்களைக் கொண்டு பெரிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்தது. இந்நிலையில் தாம்பரம், பல்லாவரம், செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர் பகுதிகளில் வசிப்போர், அடிப்படை தேவைகள், அரசின் நலத்திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு காஞ்சிபுரம் செல்ல 100 கிலோ மீட்டற்கும் மேல் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த காரணத்தால், காஞ்சிபுரத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
புதிய மாவட்ட உதயம்
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில், அறிவித்தார். 2019 நவம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம்
இதனை அடுத்து புதிய மாவட்டத்திற்கு அரசு சார்பில் நீதிகள் ஒதுக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல புதிய அலுவலகங்கள் கொண்டுவரப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த அலுவலங்கள் வைப்பதற்கு இடநெருக்கடி இருந்து வந்தன. புதிய அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் கொண்டு வர முடியாததால் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சில அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இதனையடுத்து ஒருங்கிணைந்த அலுவலகங்கள் இயங்கும் அளவிற்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது.
எப்பப்பா திறப்பீங்க ?
இதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி முதல் செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கட்டும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக நிதியாக 119.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 18 மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என உடன்படிக்கை போடப்பட்டுள்ளது. பணிகள் துவக்கப்பட்டு மிக வேகமாக நடைபெற்று வந்தன, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பணிகள் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே பணிகள் நிறைவடைந்தும், மாவட்ட ஆட்சியர் வளாகம் திறக்கப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு என்னானது ?
பணிகள் முடிந்தும் ஏன் காலதாமதம் ஆகிறது என்பது குறித்து ஏபிபி நாடு சார்பில் விசாரித்துப் பார்த்தோம், " புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டப்பட்டுள்ள கட்டிடம் அமைந்துள்ள ஒரு பகுதி , தொல்லியல் துறை சார்பில் ( ASI) பாதுகாக்கப்பட்டு வரும் இடம் என தெரியவந்தது. மேலும் தொல்லியல் துறைக்கு இது குறித்து தடையில்லா சான்று பெறவும் மாவட்ட நிர்வாகம் சார்பில், அனுமதி கூறப்பட்டுள்ளது என தெரிய வந்தது " . தொல்லியல் துறை சார்பில் முன்கூட்டியே , அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பதும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, " தொல்லியல் துறைக்கு சொந்தமான மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்". மேலும், "அவரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடையில்லா சான்று பெற விண்ணப்பித்திருக்கிறார்களா என கேட்ட கேள்விக்கு, விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் பெயர் வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " பெருங்கற்கால மனிதர்கள் வாழ்விடமாக இது கருதப்படும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கு முன்பாகவே இதற்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும் , அவ்வாறு அனுமதி பெற்று இருந்தால், இப்பொழுது மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடித்துவிட்டு காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது' என கூறினார்.
"தனக்கு எதுவும் தெரியாது "
இதனையடுத்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஸ்வநாதனிடம் தொடர்பு கொண்டு பேசினோம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. சிறு சிறு பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அனுமதி பெறாமல் கட்டப்பட்டது, குறித்தெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, DTCP மற்றும் தொல்லியல் துறை அனுமதிக்காக மாவட்ட ஆட்சியர் வளாகம் திறக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை சார்பில், மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் பணிகள் முடிவடையும் என தெரிவித்தார்.
என்னதான் நடக்கும் ?
மாவட்ட நிர்வாகம் சார்பில் தடையில்லா சான்றிதழ் விண்ணப்பித்ததற்கு பிறகு , டெல்லியை சேர்ந்த ஒரு குழுவினர், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சிறு பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டு இடத்தில் அமைந்துள்ளதால், "ஒருவேளை தடையில்லா சான்று கிடைக்காத பட்சத்தில், அந்தப் பகுதியை அகற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது".
அதிகாரி முதல் மக்கள் வரை அவதி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாமல் இருப்பதால், கோப்புகளை வைப்பதற்கு கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் அரசு அதிகாரிகள். தற்பொழுது அலுவலகங்கள் இயங்கி வரும் கட்டிடங்கள் அனைத்தும் பழைய கட்டிடங்கள் என்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் அலுவலகத்திற்குள் வருவதாகவும், இதனால் கோப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகும் குமுறுகின்றனர் அதிகாரிகள். பொதுமக்களும் மாவட்டம் பிரித்த பிறகும், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தேடித் தேடி அலையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் திறக்கப்பட வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.