உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் கணினிகள் முடங்கியுள்ள நிலையில், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்று கிளவுட். சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
இந்த சூழலில், கிரவுட் ஸ்ட்ரைக் (CrowdStrike) காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியுள்ளது. கிரவுட் ஸ்ட்ரைக் என்பது இணைய பாதுகாப்பு நிறுவனமாகும். விண்டோஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
இதன் தாக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் எதிரொலித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கணினி முடக்கம் காரணமாக 192 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதோடு, விமானங்களை புக் செய்ய முடியாமலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ரீபண்ட் பெற முடியாமலும் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவில் விமான பயண அமைப்பு செயலிழந்துள்ளது. அதன் விளைவாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரீபுக்/ரீபண்ட் பெறுவதற்கான ஆப்ஷனும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் அஸூரில் ஏற்பட்டுள்ள நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவை தாமதமாகியுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை பதிவு செய்வது மெதுவாகியுள்ளது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை விரைவாகத் தீர்க்க எங்கள் டிஜிட்டல் குழு மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்படுகிறது. உதவிக்கு, எங்கள் விமான குழுவைத் தொடர்பு கொள்ளவும்" என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், "பயணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும், விமான சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கூடுதல் இருக்கை, தண்ணீர் மற்றும் உணவு வழங்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உங்கள் பிரச்னைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய அயராது உழைத்து வருகிறோம். உங்கள் பொறுமையும் ஒத்துழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது" என்றார்.