ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என செய்தி இணையதளங்கள், OTT இயங்குதளங்கள் மற்றும் தனியார் செயற்கைக்கோள் சேனல்களுக்கு மத்திய அரசு இன்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், "ஆன்லைன் சூதாட்ட தளங்கள் பற்றிய விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என தனியார் செயற்கைக்கோள் சேனல்கள், அதன் செய்தி இணையதளங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலை மீறும் தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கு சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT இயங்குதளங்களுக்கு வழங்கிய தனி அறிவுறுத்தலில், இதே போன்ற உத்தரவை விதித்துள்ளது. மேலும், இந்திய பார்வையாளர்களை இலக்காக வைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 27ம் தேதி முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை அன்றைய தினமே அமைச்சரவை பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுக்கள் ஏற்படுத்தியுள்ல தாக்கம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துகளும் பெறப்பட்டன. அனைத்து கருத்துகளின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட வரைவு மேலும் மெருகூட்டப்பட்டு இன்று அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டது.