நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?' போன்ற கேள்விகள், நம்மில் பெரும்பாலோர் அனைவருடனும் விவாதிக்க விரும்ப மாட்டார்கள். இத்தகைய தகவல்கள் பொதுவாக குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படும். இருப்பினும், திருமண உறவை பொறுத்தவரை, விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளது.
நீங்கள் விவாகரத்து கோரும்போது, நீங்கள் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படலாம். இருவருக்கும் இடையே சொத்துக்கள் பிரிக்கப்படும். விவாகரத்து பரஸ்பரம் இல்லாதபோது, சில சமயங்களில், மனைவி தன் கணவரிடம் வருமான விவரங்களைக் கேட்டு, ஜீவனாம்சம் பெறலாம்.
கணவர் வருமான விவரங்களை வெளியிட மறுத்தால், மனைவி வேறு வழிகளில் அதை தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் ஒரு பெண் தனது கணவரின் வருமான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டது அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரின் நிகர வரிவிதிப்பு வருமானம்/மொத்த வருமானம் குறித்த பொதுவான விவரங்களை 15 நாட்களுக்குள் மனைவிக்கு வழங்குமாறு வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
சஞ்சு குப்தா என்ற பெண் தனது கணவரின் வருமான விவரங்களைக் கோரி ஆர்டிஐ தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. ஆரம்பத்தில், மத்திய பொதுத் தகவல் அலுவலர் (CPIO), பரேலி வருமான வரித் துறை அலுவலகம், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். ஏனெனில், கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
முதல் மேல்முறையீட்டு ஆணையத்தில் (FAA) அப்பெண் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், மத்திய பொதுத் தகவல் அலுவலரின் உத்தரவு செல்லும் என முதல் மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, மத்திய பொதுத் தகவல் அலுவலரிடம் அந்த பெண் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கடந்தகால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் சிலவற்றை ஆய்வு செய்து செப்டம்பர் 19, 2022 அன்று தனது உத்தரவை வழங்கியது மத்திய தகவல் ஆணையம். 15 நாட்களுக்குள், கணவரின் வருமானம் பற்றிய விவரங்களை மனைவிக்கு வழங்குமாறு மத்திய பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.