நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வட இந்தியாவைப் பொறுத்தவரையில் தீபாவளி பண்டிகையானது 5 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். டெல்லியில் உள்ள கல்லூரிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.


டெல்லியில் அமைந்துள்ளது மிராண்ட ஹவுஸ் பகுதி. இந்த பகுதியில் மகளிர் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரி மைதானத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது, கல்லூரி சுற்றுச்சுவருக்கு வெளியே இளைஞர் கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது அந்த கும்பலில் இருந்த இளைஞர் ஒருவர் மேலே ஏறி, கல்லூரி சுற்றுச்சுவர் மீது ஏறினார்.


சுற்றுச்சுவர் மீது ஏறிய அந்த இளைஞர் தன்னுடன் வந்த மற்றொரு இளைஞரையும் கையை பிடித்து மேலே வரவழைக்கிறார். அவர்கள் சுற்றுச்சுவர் மேலே நின்று கொண்டு, கல்லூரி மைதானத்தில் உள்ள பெண்களை தகாத வார்த்தையாலும், ஆபாச வார்த்தையாலும் கேலி செய்ததாக கூறப்படுகிறது.






இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் அளித்த தகவலில், “ கடந்த 14-ந் தேதி தீபாவளி மேளா கொண்டாட்டம் மிராண்டா ஹவுசில் கல்லூரியில் நடைபெற்றது. அதில், அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மாணவர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்ததால் நுழைவு வாசல் பகுதி மூடப்பட்டது.






ஓரிரு மாணவர்கள் இந்த கொண்டாட்டத்தை கல்லூரி சுற்றுச்சுவரில் ஏறி பார்த்துள்ளனர். அவர்கள் நிறுத்தப்பட்டு, கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை. கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றது” என்று கூறியுள்ளனர்.  


மேலும், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு கோஷமிட்டுக்கொண்டே செல்வது போன்ற வீடியோவும். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.