சமூக நீதிக்காக போரடியதில் முன்னோடியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் . கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத் தந்த அவருக்கு, 1994-ல் வைக்கத்தில் நினைவகம் அமைக்கப்பட்டது. இதனை ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைத்த தமிழ்நாடு அரசு புதிய நூலகம் ஒன்றையும் அமைத்தது. தந்தை பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Continues below advertisement

குறிப்பாக கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை நீக்கக் கோரி 1924-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

வைக்கம், கேரள மாநிலத்தின் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கியிருந்த நகரமாகும். அந்நகரிலுள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் எல்லாம் இருந்தன. ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் என்பவர் தீண்டத்தகாதவர் என்பதால், அந்த நீதிமன்றத்திற்குள் செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே.மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராடினார்கள்.

போராட்டம் நடத்திய அனைவரையும் திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்தனர். அதனால், போராட்டம் நின்றுவிடும் சூழ்நிலை உருவானது. அப்போது இறுதியாக கைதாகிச் சிறை சென்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் ஆகியோர் கையெழுத்திட்டு, அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்குக் கடிதம் எழுதி, வைக்கம் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வெற்றி தேடித் தேர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அந்தக் கடிதம் கிடைத்ததும், 13.04.1924 அன்று வைக்கம் நகருக்கு வந்த தந்தை பெரியார் அவர்களால் போராட்டம் தீவிரம் அடைந்தது.

தந்தை பெரியார் அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்ததால், போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டதைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில், திருவாங்கூர் போலீஸார் தந்தை பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதல் முறை 1 மாதமும், இரண்டாவது முறை 4 மாதமும் கடுங்காவல் தண்டனை வழங்கி, தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். வைக்கம் நகரைச் சுற்றியிருந்த கிராம மக்களும் திரண்டு தொடர்ந்து போராடியதால் திருவாங்கூர் சமஸ்தான அரசு பணிந்து, மகாதேவர் கோயில் தெருக்களில் ஈழவர் முதலான வகுப்பார் நடந்து செல்வதற்கு இருந்த தடையை நீக்கி, எல்லோரும் செல்லலாம் என்று ஆணைபிறப்பித்தது. வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதால் தந்தை பெரியார் “வைக்கம் வீரர்” எனப் போற்றப்பட்டார்.

இந்தநிலையில், கேரளாவில் வைக்கம் போராட்டத்தின்போது தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்ட அரூக்குற்றில் ரூ.4 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. செப்.26ல் தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, கேரளா அமைச்சர் ஷாஜி செரியன் அடிக்கல் நாட்டுகின்றனர். வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்துக்கு சென்ற தந்தை பெரியார் அரூக்குற்றி சிறையில் இருந்ததன் நினைவாக இம்மண்டபம் அமைக்கப்பட உள்ளது.