பண்டிகைகள் என்றாலே இனிப்பு, நட்பு, உறவு என்று நீளும் சந்தோஷத்தின் பட்டியல். அதுவும் அப்படியொரு பண்டிகை நாளில் நாம் பார்க்க நினைப்பவர் நம் கண் முன்னால் வந்து நின்றால் அது திருவிழா போல் மகிழ்ச்சி தரும் திருநாளாகிவிடும்.
அப்படி ஒரு சந்தோஷ தருணம் தான் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கு வாய்த்துள்ளது. அது பற்றி அவரே விவரித்துள்ளார். ஆமிர் சுஹைல் ஹுசேனுக்கு 27 வயது. அவர் கேரள மாநிலம் அலுவாவில் வசிக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு குழந்தை ஒன்றுக்கு ஸ்டெம் செல் தேவைப்படுவதாக எழுந்த கோரிக்கையைப் பார்த்து ஆமிர், மகாராஷ்டிரா மாநில புனேவைச் சேர்ந்த விஹா என்ற குழந்தைக்கு ஸ்டெம் செல் தானமாகக் கொடுத்துள்ளார். குழந்தை விஹாவுக்கு குழந்தைகளுக்கான மயலோமோனோசைட்டிக் லுக்கேமியா (Juvenile Myelomonocytic Leukemia) ஏற்பட்டிருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்தக் குழந்தை பிழைத்துக் கொண்டது. விஹாவின் பெற்றோருக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அதனாலேயே ஆமீருடன் எப்போதுமே விஹாவின் பெற்றோர் தொடர்பில் இருந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயண திட்டம்:
ஆமீர் சுஹைல் ஹுசேன் விரைவில் கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவிருக்கிறார். அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னதாகவே குழந்தை விஹாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால், அதற்குள் கரோனா ஊரடங்கு வந்துவிட்டது. இதனால் அவரால் குழந்தையைப் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், ஆமீரின் விருப்பத்தை நிறைவேற்ற விஹாவின் பெற்றோர் திட்டமிட்டனர். ஆமீரின் சகோதரியின் உதவியை நாடினர். ஆமீருக்குத் தெரியாமல் மூவரும் அந்த சர்ப்ரைஸுக்கு திட்டமிட்டனர். ஓணம் பண்டிகையன்று தான் ஆமீரின் பிறந்தநாளும் கூட. ஆகையால் அந்த நாளில் ஆமீரை குழந்தை விஹாவுடன் சென்று ஆச்சர்யப்படுத்துவது என பக்காவாக ப்ளான் செய்யப்பட்டது. அதேபோல் அவர்கள் ஆமீர் வீட்டுக்கு திடீரென வந்தனர். இது குறித்து ஆமீர், "விஹாவின் பெற்றோர் இந்த இன்ப அதிர்ச்சித் திட்டத்தை என் சகோதரியுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கின்றனர்.
கோவிட் காரணமாக அவர்களை நான் சந்திக்க முடியவில்லை. எங்கே குழந்தையைப் பார்க்காமலேயே வெளிநாடு செல்ல நேரிடுமோ என்று அஞ்சினேன். ஆனால், அவர்கள் ஓணம் பண்டிகை காலத்தில் இங்கே வந்துவிட்டனர். அதுவும் எனது பிறந்தநாளில் அவர்கள் வந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நாளை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல் விஹாவுக்கும் ஆமீரின் வீட்டில் இருப்பது மகிழ்ச்சியான நாளாக மாறியது. இது குறித்து விஹாவின் தந்தை சந்தீப் கானேகர் கூறுகையில், ஆமீர் வெளிநாடு செல்வதற்கு முன்னதாகவே அவரைப் பார்க்க வேண்டும் என நினைத்தோம். அதை அவரது பிறந்தநாளைவிட வேறு எந்த நாளில் சிறப்பாகச் செய்துவிட முடியும். அதனால் தான் இப்போது இங்கே வந்தோம். விஹாவுக்கு கேரளாவின் ஓணம் பண்டிகை பிடித்துவிட்டது. அவள் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் நாங்கள் இங்கே இருப்போம் என்று கூறினார். குழந்தை விஹாவுக்கு சிகிச்சை நடந்தபோது அதற்கு 4 அரை மாதமே ஆகியிருந்தது.