மேகதாது அணை(Mekedatu Dam) திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்ற கர்நாடகா அமைச்சரின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. “மேகதாது திட்டம் கடலில் கலக்கும் உபரி நீரை அடிப்படையாகக் கொண்டது. எனவே, வீணாகும் தண்ணீர் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களுக்குப் பயன்படுத்தப்படும். நாங்கள் யாருக்கும் தங்கள் பங்கை மறுக்க முயற்சிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேச முடியாது, பேசினாலும் அது சட்டப்படி தப்பு. அது முடிந்து போன விவகாரம். தமிழ்நாட்டை கவனிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நானே டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது, வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.