கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 8 பேர் பலியானதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு கேரள அரசு எச்சரித்துள்ளது. 


கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததுடன் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.


தாழ்வான பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் சேதமடைந்தன. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததாலும், நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களாலும் ஒரு பள்ளி மாணவி உட்பட உயிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என்றும், மழையால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. 


முதலமைச்சர் அறிவிப்பு


மாநிலம் முழுவதும் 47 முகாம்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 886 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், காசர்கோடு, மலப்புரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தேவையான முதலுதவிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தீயணைப்புத்துறை, மீட்புப் படை மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை குழு என 7 மீட்பு குழுக்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இடுக்கியில் உள்ள அணைகள் நிரம்பியதால் நள்ளிரவில் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் அணையின் நீர் வழித்தடத்தில் இருக்கும் மக்கள் உடனடியாக மீட்பு முகாம்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று பத்தனம் திட்டா பகுதியில் இருக்கும் அணைகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் கடலோர பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்ததுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  


மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதுகாப்பு நலன்கருதி 11 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. கேரளாவில் தாமதமாக ஜூன் 8ஆம் தேதிதான் பருவமழை தொடங்கியது. கடந்த மாதம் குறைவாக மழை பதிவான நிலையில், ஜூலை தொடக்கத்திலேயே வெளுத்து வாங்க தொடங்கியது.


47 ஆண்டுகளில் இல்லாத அளவு


இந்த மாதத்தில் பெய்த மழை அளவு கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தீவிரம் தொடர்ந்து நீடிப்பதால், ஆறுகளில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என எச்சரித்த மாநில அரசு இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் கேரளா மற்றும் கர்நாடகா கடலோரp பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.