இந்தியாவின் மிகப்பெரியத் திருவிழா ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் என்றே அறியப்பட்டாலும் கூட அங்கே பணநாயகமே தலை ஓங்கி நிற்கிறது. இதற்குச் சான்றாக அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. ஆனாலும் ஜனநாயகத்தின் மாண்பைப் போற்றும் வகையில் சில சம்பவங்களும் நடந்து வாக்கை விலைக்கு வாங்க நினைப்பவர்களின் முகத்தில் அறைந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் மேகாலயா மாநிலம் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நடந்துள்ளது.


வாக்களிக்க பரிசு.. புறக்கணித்த மூதாட்டி:


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.  இந்நிலையில் அங்கு பல்வேறு கட்சியினரும் வாக்காளர்களைக் கவர பரிசுகளை வழங்குவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. காசி ஹில்ஸ் மாவட்டத்தில் ப்யூரிட்டி பவா என்றும் மூதாட்டி தனது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட பரிசை புறக்கணித்த தகவல் வெளியாகியுள்ளது.


ப்யூரிட்டி பாவா அவர் வாழும் பகுதியில் மகளிர் அமைப்பின் தலைவியாகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இல்லாத போது அவரது குடும்பத்திற்கு ஆளும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மொஹிந்திரோ ராப்சாங் முகவர் மற்றும் ஐக்கிய ஜனநாயக கட்சியின் முகவர் என இரு தரப்பினருமே பரிசுகளை வழங்கியுள்ளனர். ஒரு தரப்பினர் குக்கரையும், இன்னொரு தரப்பினர் விலையுயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட பாத்திரத்தையும் கொடுத்துள்ளனர்.


அதிகாரிகளிடம் புகார்:


அதுமட்டுமல்லாமல் அந்த மூதாட்டி இரு கட்சிகளின் முகவர்களையும் அழைத்து பரிசுகள் வேண்டாம். இவ்வாறு பரிசு கொடுத்தால் எம்எல்ஏ ஆக முடியாது என்று தெரிவித்துள்ளார். பரிசுகளை திருப்பிக் கொடுத்த அவர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும்  புகார் தெரிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனை அவரே பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.


மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணி அரசில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியை எதிர்த்து பாஜக களமிறங்குகிறது.


மக்கள் அதிருப்தி:


மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  


வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசுகள் திறம்பட செயல்படாததால் பல்வேறு திட்டங்களின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஊழல் விவகாரங்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.