மத்திய பிரதேசத்தில் போபாலில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம் வென்றார்.
நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஆடவர் 10மீ ஏர் ரைஃபிள் போட்டியில் வெண்கலம் வென்றார். இது போட்டியின் இரண்டாவது நாளாகும், போபாலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றதன் மூலம் சீனா தனது வெற்றியை தக்க வைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் ஷெங் லிஹாவோ ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் தங்கம் வென்றார், அதே நேரத்தில் கடந்த ஆண்டு கெய்ரோ உலக சாம்பியன்ஷிப்பில் இரட்டை தங்கப் பதக்கம் வென்ற சீனாவை சேர்ந்த ஹுவாங் யூட்டிங் பெண்கள் போட்டியில் தங்கம் வென்றார்.
போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் சீனா 5 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தியா தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளியுடன் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்து போட்டிகளை விளையாடுவது என்பது ஒருபோதும் எளிதாக இருக்காது, ஆனால் ருத்ராங்க்ஷ் பாட்டீல் மீண்டும் ஒருமுறை தனது அசாத்தியமான விளையாட்டை நிரூபித்துள்ளார். இந்த போட்டியில் அவர் வெண்கலம் வென்றுள்ளார். ஆரம்ப கட்டங்களில் முன்னணியில் இருந்தார் ருத்ராங்க்ஷ் பாட்டீல். அதன் பின் 631.0 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார. 25-ஷாட் முதல் எட்டு தரவரிசைச் சுற்றில், மூன்றாவது சுற்றில் அதிகபட்சமாக 53.5 புள்ளிகள் பெற்று மீண்டும் போட்டிக்குள் வந்தார்.
8வது சுற்று இறுதியில் 262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார் ருத்ராங்க்ஷ் பாட்டீல். சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த உலக கோப்பை போட்டியில் இரண்டு நாளில் ருத்ராங்க்ஷ் இரண்டு பதகங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.