வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பொதுநல வழக்கு:


இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்படுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.


ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை:


தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


அடுத்து என்ன?


இதனிடையே, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் காந்தி சிறையில் அடைக்கப்படுவார். இதனால், அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாக வாய்ப்புள்ளது.


அரசு பங்களாவை காலி செய்ய வேண்டுமா?


டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் தான் ராகுல் காந்தி வசித்து வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அந்த குடியிருப்பில் தான் அவர் வசித்து வருகிறார்.


தற்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால், அவர் அரசு குடியிருப்பில் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி உருவாகி உள்ளது. இதுகுறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர் அரசு குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க முடியாது. பதவி பறிப்பு உத்தரவு வெளியான ஒரு மாத காலத்தில் ராகுல் காந்தி  அரசு குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் தான், ராகுல் காந்தி தகுதிநீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.