மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது அமலாக்கத்துறை இயக்குநரகம். பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறதா அமலாக்கத்துறை?
ஆனால், இந்த அமைப்பின் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல், கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கதுறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் அனில் பராப் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சமீபத்தில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த விவகாரம் தேசிய அரசியல் வரை எதிரொலித்தது. செந்தில் பாலாஜியை தொடர்ந்து, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை மிரட்டிய மத்திய இணை அமைச்சர்:
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மேல்குறிப்பிடப்பட்ட இரண்டு புலனாய்வு அமைப்புகள் விசாரிப்பவர்களில் 95 சதவிகிதத்தினர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் என நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வாதிடப்பட்டன.
இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி எதிர்க்கட்சிகளை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச (திருத்தம்) மசோதா, விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது பேசிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, "அமைதியாக இல்லாவிட்டால் வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்துவிடும்" என்றார்.
சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து பேசிய அவர், "சஃப்தர்ஜங், லேடி ஹார்டிங் மற்றும் லேடி இர்வின் மற்றும் எய்ம்ஸ் உட்பட அனைத்து மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் மத்திய அரசு மேற்பார்வையிடுகிறது.
ஜி20 கூட்டத்திற்கு முன்னதாகவே சாலைகளை மேம்படுத்த டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்காக பணம் செலவழிக்க மாட்டோம் என்றனர். மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து 700 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இப்போது சொல்லுங்கள். டெல்லி அரசின் ஆட்சியில் மத்திய அரசு எவ்வாறு தலையிட முடியும்?" என்றார்.