மின்னணு மற்றும் சமூக ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஜனநாயகத்தை அவமதித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.




முகமது நபிகள் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த முன்னாள் பாஜக நிர்வாகி நுபர் சர்மாவை கண்டித்த உச்ச நீதிமன்றத்தின் மீது, பலர் விமர்சனம் மேற்கொண்டிருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த என்.வி. ரமணா, "நீதிபதிகளுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு, நீதிபதிகள் உடனே எதிர்வினை ஆற்றாமல் இருக்கலாம். ஆனால், அதை அவர்களின் பலவீனம் என்றோ அவர்கள் ஆதரவற்று இருப்பதாக தவறாக எண்ண வேண்டாம்


ஒரு விஷயத்தை ஊதி பெரியதாக்கும் திறன் புதிதாக உருவான ஊடகங்களுக்கு உள்ளது. ஆனால், எது சரி, எது தவறு, எது நல்லது, எது கேட்டது, எது உண்மை, எது பொய் என பிரித்து பார்க்கும் திறன் அவர்களிடம் இல்லாமல் இருப்பது போல தோன்றுகிறது" என்றார்.


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற கல்வி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "ஊடகங்களில் நடத்தப்படும் விசாரணை வழக்குகளை தீர்மானிக்கும் முக்கிய காரணி அல்ல. அனுபவம் வாய்ந்த நீதிபதிகளே முடிவுகளை எடுக்க கஷ்டபடும்போது ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துவதை பார்கிறோம்.


 





 


அரைகுறையான தகவல்களுடன் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் விவாதங்கள் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு சார்புடைய தகவல்களை வெளியிடும் ஊடகம் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது. அமைப்பை கெடுக்கிறது. இதன் வழியாக, நீதி வழங்குபோது பாதிப்பு ஏற்படுகிறது. பொறுப்பை மீறி செயல்படும் உங்களால், ஜனநாயகம் இரண்டு அடிகள் பின்னோக்கி சென்றுள்ளது" என்றார்.


மற்றவற்றை ஒப்பிடுகையில் அச்சு ஊடகம் சற்று பொறுப்புடன் நடந்து கொள்வதாக தெரிவித்த அவர், "முற்றிலும் பொறுப்பற்ற முறையில் மின்னணு ஊடகம் செயல்படுகிறது. சமூக ஊடகம் அதை விட மோசமாக செயல்படுகிறது. எனவே, ஊடகம் சுய பரிசோதனை செய்து கொள்வதே சிறப்பு. என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேசுங்கள். மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தங்களின் குரல் மூலம் மக்களுக்கு கற்பித்து நாட்டை ஆற்றல் மிக்கதாக மாற்றுங்கள்" என்றார்.


சமூக ஊடகங்கள், சமீப காலமாகவே, வெறுப்பு பேச்சை பரப்புவது மட்டும் இன்றி, தேவையற்ற விவகாரங்களை ஊதி பெரிதாக்கி வருகின்றன. நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்களின் முதன்மை பணியான மக்களின் பிரச்னைகளை பேசுவதை விட்டுவிட்டு சர்ச்சைகுரிய விவகாரங்களில் அரைகுறையான தகவல்களை பரப்பி வருகின்றன.


இதற்கு தமிழ்நாடு ஒன்றும் விதி விலக்கு அல்ல. கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் உண்மையான தகவல்களே முழுவதும் தெரியாத நிலையில், பல மின்னணு ஊடகங்கள் வதந்திகள் பரவு காரணமாக அமைந்தன.