இந்திய ராணுவ பணியில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்ப்பதுதான் அக்னிபத் திட்டம். இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்த புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்ததிலிருந்தே நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு 259.44 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார்.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில், இதுகுறித்து காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத் சிங் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் நேற்று அளித்துள்ளார். அந்த பதிலில், "அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்த வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு 259.44 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 14 தொடங்கி 30ஆம் தேதி வரை ரத்தான ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் டிக்கெட் கட்டணத்தொகை சுமார் 102.96 கோடி ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றுவர். இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 45 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்