மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது. எந்த அரசியல் கட்சிகள், தங்களின் சுய பலன்களுக்காக, இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அவர்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என பேசியிருந்தார்.
பொது சிவில் சட்டத்திற்கு மாயாவதி ஆதரவா?
பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. ஆனால், இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் மாயாவதி, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது புயலை கிளப்பியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, இதுகுறித்து கூறுகையில், "பொது சிவில் சட்டம் என்ற யோசனையை எங்கள் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால், பாஜகவும் அதன் அரசாங்கமும் நாட்டில் அதை அமல்படுத்த முயலும் முறையை ஆதரிக்கவில்லை.
அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதைத் திணிக்க வேண்டும் என எந்த சட்டமும் சொல்லவில்லை. ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், விழிப்புணர்வின் மூலமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதன் மூலமும் இது செய்யப்படுவதில்லை. பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலில் ஈடுபடுவது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல" என்றார்.
"மக்களிடையே பிளவுகளை விரிவுபடுத்தும்"
பொது சிவில் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "உள்நோக்கம் கொண்ட பெரும்பான்மை அரசாங்கத்தால் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. ஏனெனில், அது மக்களிடையே பிளவுகளை விரிவுபடுத்தும்" என்றார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் பேசும்போது, ஒரு நாட்டை குடும்பத்துடன் ஒப்பிட்டுள்ளார். சுருக்கி பார்த்தால் அவரது ஒப்பீடு உண்மையாகத் தோன்றினாலும், களத்திலோ உண்மை வேறாக உள்ளது. ஒரு குடும்பம் ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால், ஒரு தேசமோ அரசியல் சட்ட ஆவணமான அரசியலமைப்பின் மூலம் ஒன்றிணைக்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் கூட பன்முகத்தன்மை உள்ளது. இந்திய அரசியலமைப்பு, இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையையும் வேறுபாடுகளையும் அங்கீகரிக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் விருப்பமாக இருந்தாலும், உள்நோக்கம் கொண்ட பெரும்பான்மை அரசாங்கத்தால் அதை மக்கள் மீது திணிக்க முடியாது. ஏனெனில், அது மக்களிடையே பிளவுகளை விரிவுபடுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.