தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன் கோடை மழை இருந்ததன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் அனலை கக்கி வருகிறது. வெப்பநிலையின் எதிரொலியாக பகல் நேரங்களில் பெரும்பாலான சாலை காலியாகவே உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெயில் தொடர்பான மீம்ஸ் மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


சூரியனிடம் நேரடி தொடர்பு இருப்பதுபோல் தற்போது தமிழ்நாடு இருந்து வருகிறது. வழக்கமாக மே மாதம் வரும் கத்திரி வெயிலின் போது 110 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாக வேண்டிய வெப்பநிலை, தற்போது ஏப்ரல் முதலே ஆட்டத்தை தொடங்கியுள்ளது. சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் தான் இதில் டாப் லிஸ்ட்.


எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், வரும் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்  ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து பொளந்து கட்டும் நிலையில் மேலும் அதிகரித்து காணப்படும் என்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக வெப்ப அலையும் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.