தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. டிஎன்டி ஃப்ளை ஓவர் முதல் காசிபூர் பார்டர் வரை போக்குவரத்து முடங்கியது. காலை தொடங்கி மதியம் 2 மணி வரை ஐடிஓ, சர்தார் படேல் மார்க், காஷ்மீரி கேட், சாணக்யாபுரி ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு எந்தெந்த பாதைகளை தவிர்க்க வேண்டும் எந்தப் பாதையில் எப்போது செல்லலாம் என மக்களுக்கு யோசனை தெரிவித்தனர். காவல்துறை முன்னறிவிப்பை பின்பற்றி அரை மணி நேரம் முன்னதாக கிளம்பியும் கூட நெரிசலில் சிக்கிக் கொண்டதாக ஒருவர் கூறினார். சாலை போக்குவரத்து நெரிசலால் டெல்லியில் பலரும் இன்று மெட்ரோ போக்குவரத்தை நாடினர்.
ஒத்திகையை கண்டு கழித்த மக்கள்:
போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு ஊர்வலத்திற்கான ஒத்திகை டெல்லியில் இன்று முழு அளவில் நடைபெற்றது. இதில், பீரங்கிகள், ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வாகனங்கள், எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் டெல்லியில் கர்தவ்ய பாதையில் (கடமை பாதை) தனித்தனியாக ஒத்திகைகளை மேற்கொண்டன. விமானப்படை, கடற்படை, துணை ராணுவப்படை, பெண்கள் படை ஆகியவற்றின் அணிவகுப்புகள் நடைபெற்றன. இந்த ஆண்டு 50 விமானப்படை விமானங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க இருக்கின்றன. இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய விமானப் படையின் கருடா கமாண்டோ படை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இருக்கிறது.
குடியரசு தினம் 2023: தலைமை விருந்தாளி யார்?
எகிப்து நாட்டின் அதிபர் அப்தல் பத்தா எல் சிஸி தான் 2023 குடியரசு தின நிகழ்சியின் தலைமை விருந்தாளியாக இருப்பார். இது இந்தியா, எகிப்து நாட்டின் தூதரக உறவின் 75வது ஆண்டு விழா என்பதால் எகிப்து அதிபர் தலைமை விருந்தாளியாக அழைக்கப்பட்டுள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் 24-ம் தேதி எகிப்து நாட்டு அதிபர் இந்தியா வருகிறார். அவருடன் 180 பேர் கொண்ட குழுவினர் வருகின்றனர்.
அணிவகுப்பு எத்தனை மணிக்கு தொடங்கும்?
குடியரசு தின அணிவகுப்பு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும். கர்தவ்ய் பாதை முதல் ராஷ்டிரபதி பவன் வரையில் இந்தியா கேட் முதல் செங்கோட்டை வரை என நடைபெறும்.
குடியரசு தின வரலாறு:
ஜனவரி 26 ஆம் தேதியன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நாளே குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 24ம் தேதி 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது செயல்பாட்டிற்கு வந்தது.
ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களின் ஆட்சி ஏற்பட்டது என அன்றைய தினத்தை கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.