பெங்களூருவின் பரபரப்பான சாலையில்  நபர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை  வாரி இறைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.


பெங்களூருவின் பரபரப்பான கே.ஆர்.மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 10 ரூபாய் தாள்களை மேம்பாலத்தின் மீது நின்றபடி வீசி எறிந்து அங்கிருந்தோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


கருப்பு நிற கோட் சூட் அணிந்தும், கடிகாரத்தை உடையில் தைத்தபடியும் வந்து இந்த நபர் பணத்தை வீசியெறிந்த நிலையில், ரூபாய்த்தாள்களை எடுக்க மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை அள்ள முண்டியடித்த நிலையில், அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அங்கு விரைந்த காவல் துறையினர் பணத்தை வீசியெறிந்த நபரைக் கைது செய்தனர்.


இந்நபர் சுமார் 3000 ரூபாய் வரை இறைத்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், படப்பிடிப்பைப் போல் இச்சம்பவம் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்நபர் மனநலன் சரியில்லாத நபராக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பணம் வீசியெறியப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.


தெலங்கானா சம்பவம்:


இதேபோல் முன்னதாக தெலங்கானாவில் கொள்ளை கும்பல் ஒன்று ஏடிஎம்மில் இருந்து சுமார் 19 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றபோது சாலையில் பண மழை போல் ரூபாய் நோட்டுகள் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் திருடச் சென்றபோது அலாரம் ஒலித்ததை அடுத்து வங்கி ஊழியர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் உடனடியாக விரைந்துள்ளனர்.


 






தொடர்ந்து சினிமா பாணியில் இந்தக் கொள்ளையர்களை காவல் துறையினர் துரத்திச் சென்று பிடித்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.