வீட்டுவேலை பார்க்க விரும்பாவிட்டால் திருமணத்துக்கு முன்னரே பெண்கள் சொல்லிவிட வேண்டும். அப்படிச் சொன்னால் அந்த திருமணம் வேண்டுமா என்பதை மணமகன் வீட்டார் பரிசீலிக்க ஏதுவாக இருக்கும். ஒருவேளை திருமணத்திற்குப் பின்னர் வீட்டுவேலை பார்க்க விரும்பாவிட்டால் வீட்டாருடன் பேசித் தீர்வு காணலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் விசாரணைக்கு வந்த வழக்கில் தான் நீதிமன்றம் இத்தகைய கருத்தைக் கூறியுள்ளது. நீதிபதி விபா கங்கன்வாடி மற்றும் ராஜேஷ் பாட்டீல் அடங்கிய அமர்வு, திருமணத்திற்குப் பின்னர் கணவர் வீட்டு வேலைகளைச் செய்வதை வேலைக்காரி வேலை பார்க்கவேண்டியுள்ளதாக ஒரு பெண் சொல்ல முடியாது.
ஒரு குடும்பத்திற்காக செய்யும் வேலை எப்படி வீட்டு பணிப்பெண் செய்யும் வேலையோடு ஒப்பிட முடியும்? அவ்வாறாக வீட்டு வேலையில் விருப்பம் இல்லையெனால் அதனை திருமணத்திற்கு முன்னரே சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணம் முடிந்த பின்னர் வீட்டாருடன் பேசித் தீர்க்க வேண்டும் என்றனர்.
முன்னதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498ஏவின் கீழ் தன் கணவர் குடும்பத்தின் மீது மனைவி புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரை எதிர்த்து கணவர் வீட்டார் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கணவர் வீட்டார் மீது இபிகோ 498ஏ கணவர் மற்றும் அவரது வீட்டார் துன்புறுத்தல், 323 வேண்டுமென்றே காயப்படுத்துதல், 504 திட்டமிட்டே அவமதித்தல், 506 கிரிமினல் குற்றம் ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஃப்ஐஆர் விவரம்:
அந்தப் பெண் கொடுத்த எஃப்ஐஆரில் தான் திருமணமாகி ஒரு மாதம் வரையிலேயே அன்புடன் மரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை ஒரு வேலைக்காரி போல் நடத்தியதாகவும் கூறியிருந்தார். அதேபோல் தான் ஒரு ஆண் மகவையே பெற்றுத்தர வேண்டும் என்று கணவர் வீட்டார் துன்புறுட்தியதாகத் தெரிவித்தார். இவருக்கு கடந்த 2019 டிசம்பர் 12ல் திருமணமானது. இவர் ஜூன் 27 2020ல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். அவரின் கணவர் பிப்ரவரி 28 2020ல் ரூ.17 லட்சத்துக்கு கார் வாங்கியுள்ளார். அதனால் பெண் வீட்டார் சொல்லியது போல் சம்பவங்கள் நடந்திருக்க முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் மனைவி தன்னை கணவர் வீட்டார் வேலைக்காரி போல் நடத்தினர் என்று பொத்தாம் பொதுவாக மட்டுமே சொல்லியுள்ளார் தவிர என்ன மாதிரியான மன உளைச்சல், உடல் ரீதியான துன்புறுத்தலைத் தந்தார்கள் என்று விளக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மும்பை நீதிமன்றத்தின் இந்தக் கருத்து பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுள்ளது.முன்னதாக, நேற்று மும்பை பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றம் பெண் ஒருவர் தொடர்ந்த ஸ்டாக்கிங் வழக்கில், மும்பையின் பரபரப்பான சாலைகளில், குறிப்பாக காலை நேரங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களை அடைய மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது யாரையும் பின்தொடர்வது சாத்தியமில்லை. பெண்ணின் புகார் தாமதமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அடிப்படையில், பரபரப்பான காலை நேரங்களில் நடைபாதையில் நடந்து செல்லும் ஒருவரை, அதுவும் சாலையின் மறுபுறத்தில் இருந்து பைக்கில் பின்தொடர்வது மிகவும் சாத்தியமற்றது எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட நபரை இவ்வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.
அதற்கும் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வழக்கில், கணவனை அவதூறாகப் பேசுவதும் எந்த ஆதாரமும் இல்லாமல் கணவனை குடிகாரன் என்று சொல்வது கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய உத்தரவுகளை மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.