'ஃபயர் ஹேர்கட்' என்பது சமீப காலமாகவே சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இது சிகையலங்கார நிபுணர்கள் பயன்படுத்தும் ஒரு புதிய முறையாகும். அவர்கள் முடியை வெட்ட நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். அந்த ஹேர்கட்டை முயன்ற குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகரில் உள்ள ஒரு சலூனில் நேற்று 18 வயது இளைஞர், தனது முடியை வெட்ட சென்றுள்ளார். அப்போது, ஃபயர் ஹேர்கட் மூலம் அவரது முடி வெட்டப்பட்டபோது தீப்பிடித்ததில் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் பதிவான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முடி வெட்டப்படுவதற்கு முன்பு, அந்த நபர் அமைதியாக அமர்ந்திருந்தார். இருப்பினும், சிறிது நேரத்தில் தலையில் பற்றி கொண்ட நெருப்பு அவரது கழுத்து வரை நீண்டது. இதனால், அவர் வலியால் அழத் தொடங்கினார்.
பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இளைஞரின் கழுத்து மற்றும் மார்பில் தீக்காயங்கள் இருந்ததாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஹேர்கட் செய்வதற்காக அவரது தலையில் ஒருவித ரசாயனம் தடவப்பட்டதால் பாதிக்கப்பட்டவரின் உடல் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவரின் கழுத்து மற்றும் மார்பில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், வாபியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து வல்சாட்டில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் வாபி நகர காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாபியில் உள்ள படக்மோரா பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், சுல்பாட் பகுதியில் உள்ள சலூனில் "ஃபயர் ஹேர்கட்" செய்ய சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை அலுவலர் கரம் சிங் மக்வானா பேசுகையில், "பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பெற முயற்சித்து வருகிறோம். அவர் வல்சாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் சூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிகிறோம். ஃபயர் ஹேர்கட்டுக்கு எந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.