எதிர்க்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களில் பாஜக தங்களின் அரசுகளை அமைக்க முயற்சி செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது.


பாஜகவின் துணையோடு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய கட்சியை இரண்டாக உடைத்து முதலமைச்சரானார். 


சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு கட்சி மாற 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அளிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை வெளியிட்ட பகீர் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை பாஜகவில் இணைய வைக்க பணம் கொடுத்த மூன்று பேரை பிடித்திருப்பதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு பண்ணை வீட்டில் ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய தலைவர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது.






பேச்சுவார்த்தை நடைபெற்ற பண்ணை வீடு எம்எல்ஏ பைலட் ரோகித் ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்றும் கட்சி மாறுவதற்கு பேசிய பேரம் குறித்து இவரே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். நான்கு எம்எல்ஏக்களை பாஜக சேரவைப்பதற்காக மொத்தம் 250 கோடி ரூபாய் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என எம்எல்ஏ ரோகித் ரெட்டி புகார் அளித்துள்ளார். தான் மிரட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மத குரு ராம் சந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா, திருப்பதியைச் சேர்ந்த சாமியார் டி சிம்ஹாயாஜி, ஹைதராபாத் தொழிலதிபர் நந்தகுமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.


இதுகுறித்து விரிவாக பேசிய தெலங்கானா காவல்துறை தலைவர் ஸ்டீபன் ரவீந்திரன், "கட்சி மாறுவதற்காக தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறி எம்எல்ஏக்கள் போலீசாரை அழைத்தனர். கட்சி மாறுவதற்காக பெரும் பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 


ரோஹித் ரெட்டிக்கு 100 ரூபாயை கோடியும் மற்ற 3 எம்எல்ஏக்களுக்கும் தலா 50 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். பாஜகவில் சேரவில்லை என்றால், கிரிமினல் வழக்குகள் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் / சிபிஐ மூலம் ரெய்டுகள் நடத்தப்படும்.


டிஆர்எஸ் கட்சி தலைமையிலான தெலங்கானா அரசு கவிழ்க்கப்படும் என மிரட்டியதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் எழுதி, இயக்கி, தயாரித்த நாடகத்தை டிஆர்எஸ் அரகேற்றம் செய்திருப்பதாக பாஜக இன்று குற்றம் சாட்டியுள்ளது.


100 கோடி ரூபாயை வழங்கியது யார் என கேள்வி எழுப்பிய தெலங்கானா மாநில பாஜகவின் முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டி, "போலீசார் பண்ணை இல்லத்திற்கு வருவதற்கு முன்பே, ஊடகக் குழுவினர் அங்கு இருந்தனர். 


உள்ளே என்ன நடக்கிறது என்ற விவரங்களைத் தெரிவித்தனர். பண்ணை வீட்டுக்குள் அனுமதித்தது ஏன்? இதில் பாஜக எப்படி ஈடுபட்டுள்ளது? இவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் அல்ல" என தெளிவுப்படுத்தியுள்ளார்.