சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், கருக்கலைப்பு தொடர்பான உரிமையைப் பொறுத்தவரை, திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்னும் வித்தியாசம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
”திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது. சட்டப்பிரிவு 3 பிசி திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களிடையே செயற்கையான வேறுபாட்டை உருவாக்குகிறது. இனி கருக்கலைப்பு உரிமையைப் பொறுத்தவரை, அந்த வித்தியாசம் இல்லை. குழந்தை பெற்றுகொள்ளும் சுய உரிமைகள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணமான பெண்ணைப் போன்ற உரிமைகளை வழங்குகின்றன. பாதுகாப்பான பாலியல் தொடர்பான தகவல்கள் அனைத்துப் பிரிவினருக்கும் பரப்பப்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாதி அல்லது பிற காரணங்களை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பாதுகாப்பான சிகிச்சை கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.” என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது