கர்நாடக மாநிலம் கடக்கில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் முகமது நபி பற்றி கட்டுரை எழுதச் சொன்னது குறித்து விசாரணை நடத்த கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


நபிகள் குறித்த கட்டுரை


கர்நாடக மாநிலத்தில் மத சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சமீப காலமாக அளப்பரிய அளவில் உயர்ந்துள்ளது. ஹிஜாப் பிரச்சனை மிகவும் தீவிரமாக இருந்த ஒரே தென்னிந்திய மாநிலமாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு இஸ்லாம்-இந்து மத பிரச்னையுடன் வந்துள்ளது கர்நாடகம். நபிகள் நாயகம் குறித்து கட்டுரை எழுத சொன்னதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகாவி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற கட்டுரை எழுத சொன்னதாக அறிந்த வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம சேனையின் ஆர்வலர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியரை தாக்கியுள்ளனர். நடந்த வன்முறை சம்பவத்தால் 172 மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தலைமை ஆசிரியர் "மத மாற்றத்தை" எளிதாக்க முயற்சிப்பதாக ராம் சேனையின் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.



நடவடிக்கை


தொகுதி கல்வி அதிகாரி விருபாக்ஷப்பா நடுவினாமணி ஏஎன்ஐயிடம் கூறுகையில், "ஸ்ரீ ராம் சேனிடம் இருந்து புகார் நகலை பெற்றுள்ளோம். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் இருந்தும் தகவல் பெற்று துணை இயக்குனரிடம் வழங்குவோம்" என்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க...ஊடகத்தினரை எச்சரிக்கும் TTF வாசன்


ஸ்ரீ ராம் சேனை


நாகவி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் முனாஃபர் பிஜாபூர் நபிகள் நாயகம் பற்றிய கட்டுரைப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார், அதைத் தொடர்ந்து வலதுசாரி ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.






அதிருப்தியடைந்த பெற்றோர்


இதுகுறித்து மாணவர் ஒருவரின் பெற்றோர் ஷரணப்ப கவுடா ஹப்லாட் கூறுகையில், ''கட்டுரை போட்டி நடத்தி, 5,000 ரூபாய் பரிசுத் தொகை தருவதாக பள்ளி அறிவித்து, மாணவர்களின் மனதில் இஸ்லாத்தை திணிக்க பள்ளி தலைமையாசிரியர் முயற்சி செய்வதாக அறிந்தேன். சிறுவர், சிறுமியர் ரூ. 5,000 வெல்வதற்காக கட்டுரை எழுத வைக்கப்பட்டது. அதில் பல இந்து மாணவர்கள் உள்ளனர், அவர்கள் மத நம்பிக்கைகைகள் இதன் மூலம் மாறக்கூடும். மாணவர்களை மதமாற்றம் செய்வதே இவர்களது நோக்கம். அதனால்தான் ஸ்ரீராம் சேனை ஆர்வலர்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்தேன். முகமது நபி பற்றிய கட்டுரைப் போட்டியை நடத்துவதன் நோக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். விசாரணை தீவிரமாக நடைபெற வேண்டும்", என்று கூறினார்.