திருமண பந்தம் ஏற்படும் தம்பதிகள் இடையே ஒரு சில நேரங்களில் சண்டை ஏற்பட்டு பிரியும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை யார் பார்த்து கொள்வது என்ற பிரச்னை வருவது வழக்கம். அப்போது இருவரில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடன் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி ஒரு வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கில் நீதிபதி ஒரு முக்கிய பார்வையை முன்வைத்துள்ளார். 


சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய குழந்தைகள் தன்னுடைய பாதுகாப்பில் இருக்க உத்தரவளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 


அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “இருநபர்கள் திருமணம் செய்யும் போது அவர்கள் இருவரும் தங்களுடைய உடல் தேவைகளுக்காக திருமணம் செய்து கொள்வதில்லை. அவர்கள் அடுத்த சந்ததியினரை உருவாக்க இனபெருக்கம் செய்ய தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தாய், தந்தை ஆகிய இருவரின் பந்ததிற்கு உரியவர்கள். இப்படி நடைபெற்ற திருமணத்திலிருந்து பிரியும் நபர்களால இந்தப் பந்தம் உடைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


 






மேலும் இந்த வழக்கில் அவர், “ஒரு பெற்றோர்களில் ஒருவர் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாக்குவது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் குற்றமாகும். ஏனென்றால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது தானாக வெறுப்பு வருவதில்லை. அவர்களுக்கு நெருக்கமான மற்றும் நம்பிக்கைதக்க ஒருவர் கூறும் போது மட்டுமே தாய் அல்லது தந்தை மேல் வெறுப்பு உணர்வு வருகிறது” 


சட்டத்தின் மூலம் ஒருவருடைய அகந்தையை நிறைவேற்றி கொள்ளலாம். ஆனால் அது குழந்தையின் தேவையை எப்போதும் பூர்த்தி செய்யாது. சட்டத்தை இயற்றியவர்கள் குழந்தையின் நலனை மட்டுமே பார்த்து இயற்றியுள்ளனர். ஆனால் குழந்தையின் மனநலத்தை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இந்த மாதிரி பெற்றோர்கள் பிரியும் சூழலில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலம் சார்ந்த பிரச்னையை சட்டம் கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறினார். 


இந்த வழக்கில் பெண் வழக்கறிஞர் தனக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும் 2021ஆம் ஆண்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடைய இரண்டு குழந்தைகளும் தந்தையின் பாதுகாப்பில் அவருடைய வீட்டில் வசித்து வருதாக கூறியிருந்தார். அந்த இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் இருந்து தனக்கு பெற்று தர வேண்டும் என்று கோரி இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தைகள் இருவரையும் தாயின் கட்டுப்பாட்டில் இருக்க உத்தரவிட்டார். அத்துடன் அந்த குழந்தைகள் தன்னுடைய தாயின் பெற்றோர்களுடன் வழக்கம் போல் இருந்து பள்ளிக்கு செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.