பெண்களின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச திருமண வயது 18ஆகவும் ஆண்களின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச திருமண வயது 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வயதின் கீழ் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது.


குற்றமாக கருதப்பட்டாலும், குழந்தை திருமணம் என்பது நாட்டில் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் குழந்தை திருமணம் அதிகளவில் நடந்து வருகிறது.


இந்தியாவை பொறுத்தவரை, மற்ற மதங்களின் தனி சட்டங்களும் அமலில் உள்ளன. அதன்படி, 15 வயதுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 


இதையடுத்து, பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கையை பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரவேற்றனர். 


ஒரே மாதிரியான திருமண வயது குழந்தை திருமணங்களைக் குறைக்க உதவும் என்றும், கல்வி, தொழிலாளர் பங்கேற்பு, இனப்பெருக்க சுகாதாரம், பாலியல் பாதுகாப்பு, சுயாட்சி மற்றும் பிற துறைகளில் பெண்களுக்கு உதவும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 


ஆனால், அனைத்து திருமணமும் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பிறந்த வீட்டில் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கவும் நிதி நெருக்கடி காரணமாகவும் சில பெண்கள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றனர் என நிபுணர்கள் கூறிகின்றனர்.


திருமண வயதை உயர்த்தி திருமணத்தை தண்டனைக்குரிய செயலாக மாற்றுவது பெரிய பிரச்சினையை கிளப்பும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


இது தொடர்பான குழந்தை திருமண தடை மசோதா சட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, மசோதாவை ஆய்வு செய்யும் வகையில் நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டது.


ஆனால், மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட குழந்தை திருமண தடை மசோதாவின்படி புதிய திருமண வயது வரம்பு அனைத்து மதத்தவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மற்ற மதத்தவரின் குறைந்தபட்ச திருமண வயதுக்கு இணையாக இஸ்லாமிய பெண்களின் திருமண வயதையும் உயர்த்த தேசிய பெண்கள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இஸ்லாமிய பெண்களை 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது பாரபட்சமானது, தன்னிச்சையானது என தேசிய பெண்கள் ஆணையம் வாதிட்டது.


இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.