நேற்று சுமார் 40 பேர் கொண்ட கும்பல் நிச்சயதார்த்தம் செய்ய இருந்த 24 வயது தெலங்கானா பெண்ணை வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கடத்திச் சென்றனர். போலீசார் ஒரு மணிநேர நடவடிக்கைக்குப் பிறகு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தில், அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்த BDS (Bachelor of Dental Surgery) பட்டதாரியான பெண், தனது சொந்த வீட்டிலிருந்து கடத்தப்பட்டார்.சுமார் 100 இளைஞர்கள் தங்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக அந்தப் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடியோவில் குறைந்தது 30 பேர் வீட்டினை சேதப்படுத்துவதையும், கார் கண்ணாடிகளை உடைப்பது, ஒரு நபரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்வது, கட்டைகள் மற்றும் கம்பிகளால் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி துன்புறுத்திய நவீன் ரெட்டி என்ற நபர், கும்பலை வழிநடத்தி கடத்தியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நவீன் ஒரு பிராண்டட் டீ கடைக்கு உரிமையாளராக இருக்கிறார். பெண்ணை கடத்திய பின் அந்த டீக்கடை அடித்து நொருக்கப்பட்டது.
போலீசார் 18 பேரை கைது செய்துள்ளனர், ஆனால் முக்கிய குற்றவாளி நவீன் இன்னும் தலைமறைவாக உள்ளார். மற்றவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வைஷாலி பல் மருத்துவர் என்றும் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்றும் இப்ராஹிம்பட்டினம் போலீசார் தெரிவித்தனர்.
வைஷாலி நவீனை ஒரு பூப்பந்து மைதானத்தில் சந்தித்தார். அங்கே அவர்கள் இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நவீன் தனது மல்டி லெவல் மார்க்கெட்டிங் பிசினஸ் மூலம் பணத்தை வைத்து கார் ஒன்றைக் கூட வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், நவீன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாகவும் அந்த பெண் மறுத்துவிட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த நவீன் அந்த பெண்ணை சமூக வளைத்தளங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், நேரில் பின் தொடர்ந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
நேற்று, வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது, அப்போது நவீன் சுமார் 40 பேருடன் புகுந்து பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் வீட்டைத் தாக்கி காரை சேதப்படுத்தி கடத்திச் சென்றனர்.