Haridwar Stampede Reasons: வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது என்பது  இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது.

ஹரித்வார் கூட்ட நெரிசலில் 8 பேர் பலி:

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததாக வெளியான வதந்தியால், பிரதான கோடிலுக்கான படிக்கட்டுகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி, குழப்பம் ஏற்பட்டபோது கோயிலில் அதிகளவில் பக்தர்கள் திரண்டு இருந்ததால் 55 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மைக்காலமாக இந்தியாவில் வழிபாட்டு தலங்களள் மற்றும் அதுதொடர்புடைய நிகழ்வுகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. யாரோ சிலர் தங்களது பொறுப்பை தட்டிக் கழிப்பதன் விளைவே, இந்த மோசமான நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் - 15 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சங்கம் கட்டில் மௌனி அமாவாசை அன்று நடந்த மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். ஜனவரி 15, 2025 அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, அப்போது அதிகளவில் பக்தர்கள் குவிந்து இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக 15 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2. ஹத்ராஸ் கூட்ட நெரிசல் - 120+ பேர் பலி

ஜூலை 2, 2024 அன்று, உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் ஏற்பாடு செய்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 120 க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் பெண்கள் இறந்தனர். திறந்தவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 80,000 பக்தர்கள் கூடியிருந்தனர். எந்தவித முறையான முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில், தள்ளுமுள்ள ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி உடல்நசுங்கி பலர் உயிரிழந்தர்.

3. இந்தூர் கோயில் கூட்ட நெரிசல் - 36 பேர் பலி

மார்ச் 30, 2023 அன்று, இந்தூர் நகரில் ராம நவமி தினத்தின்போது, ஒரு பழமையான படிக்கிணறு  மீது கட்டப்பட்ட ஒரு பலகை இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர். பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அந்த இடத்தில் கூடியிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

4. வைஷ்ணோ தேவி ஆலய நெரிசல் - 12 பேர் பலி

ஜனவரி 1, 2022 அன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். புத்தாண்டு நாளில் அதிகப்படியான பக்தர்கள் அங்கு கூடியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

5. புஷ்கரம் விழா - 27 பேர் பலி

ஜூலை 14, 2015 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமந்திரியில் உள்ள ஒரு நீராடும் தளத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பேர் உயிரிழந்தனர். புஷ்கரம் திருவிழாவின் தொடக்க நாளில் ஆயிரக்கணக்கானோர் கோதாவரி நதியில் புனித நீராட வந்ததால் கூட்டம் அலைமோதியது.

6. திருப்பதி கூட்ட நெரிசல் - 6 பேர் பலி

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இரக்கம் என்பது இருந்திருந்தால் இத்தகைய மோசமான நிகழ்வுகளை இறைவன் நிச்சயம் தடுத்து இருப்பான் என பாதிக்கப்பட்டவர்கள் குமுறி வருகின்றனர். ஆனால், அரசாங்கம் நிச்சயம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தால், மன நிம்மதிக்காக வந்தவர்கள் தங்களது வாழ்க்கையயே இழந்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.