இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களை விளாசிய நிலையில், முதல் இன்னிங்சில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்சின் சதம், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப்பின் அரைசதத்தால் இங்கிலாந்து 669 ரன்களை குவித்தது. 

Continues below advertisement

முதல் ஓவரிலே பறிபோன 2 விக்கெட்டுகள்:

இந்தியாவை விட 311 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு போட்டி சவாலானதாக மாறியுள்ளது. போட்டியின் 4வது நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய உடனே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலே தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாக, அவர் அவுட்டான அடுத்த பந்திலே சாய் சுதர்சன் டக் அவுட்டானார்.

போராடும் கில் - கே.எல்.ராகுல்:

ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே 2 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்த நிலையில், கேப்டன் சுப்மன்கில் முன்னாள் கேப்டன் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியா விக்கெட்டுகளை பறிகொடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தழுவ நேரிடும் என்பதால் இருவரும் நிதானமாக ஆடினர். கேப்டன் கில் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். 

Continues below advertisement

கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், ப்ரைடன் கார்ஸ் வேகத்தாக்குதலை மாறி, மாறி நடத்தி வருகின்றனர். கேப்டன் ஸ்டோக்ஸ் இன்னும் பந்துவீச காத்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது மிகவும் அசாத்தியமானது ஆகும். ஏனென்றால், இங்கிலாந்து அணியை விட முன்னிலை பெறுவது சவாலான ஒன்றாகும். அவ்வாறு முன்னிலை பெற்றாலும் அவர்களுக்கு வலுவான இலக்கை நிர்ணயிப்பதும் சவாலானது ஆகும். 

நெருக்கடியான நிலையில் இந்தியா:

வலுவான இலக்கை நிர்ணயித்தாலும் அவர்களுக்கு கடைசி நாளான நாளை பாதியே தர ஆடுவதற்கு ஒதுக்க இயலும். அவ்வாறு ஒதுக்கி அவர்களை ஆல் அவுட்டாக்குவது என்பது மிக மிக சவாலான காரியம் ஆகும். அதனால், இந்திய அணி இந்த போட்டியில் ட்ரா செய்யும் நோக்கிலே ஆடும். 

ரிஷப்பண்டிற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் பேட்டிங் செய்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கே.எல்.ராகுல் - சுப்மன்கில் களத்தில் நங்கூரமிட்டு ஆடுவது மட்டுமே தற்போது இந்திய அணியின் முன் உள்ள ஒரே நம்பிக்கை ஆகும். பின்வரிசையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய 3 ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். ஆனால், மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் சூழலில் ஜடேஜாவைத் தவிர மற்ற ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதி்ர்பார்ப்பது கடினம். 

தொடரும் சோகம்:

இந்த போட்டி நடக்கும் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் 1932ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆடி வருகிறது. ஆனால், அங்கு இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. அந்த சோகம் இந்த போட்டியிலும் தொடரும் என்றே கருதப்படுகிறது.